ராஜஸ்தானில் ஜி-20 ஷெர்பா கூட்டம்; வருகை தரும் விருந்தினர்களுக்கு உற்சாக வரவேற்பு


ராஜஸ்தானில் ஜி-20 ஷெர்பா கூட்டம்; வருகை தரும் விருந்தினர்களுக்கு உற்சாக வரவேற்பு
x

ஜி-20 தலைமையை இந்திய ஏற்ற நிலையில், ராஜஸ்தானில் நடைபெறும் ஜி-20 ஷெர்பா கூட்டத்தில் பங்கேற்க ஜி-20 நாடுகளை சேர்ந்த விருந்தினர்கள் வருகை தந்துள்ளனர்.



உதய்ப்பூர்,


இந்தோனேசியாவின் பாலி நகரில் ஜி-20 உச்சி மாநாடு கடந்த நவம்பர் மாதம் 15, 16 ஆகிய 2 நாட்களில் நடைபெற்றது. சீனா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட ஜி-20 அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள ஆசிய, ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த பல்வேறு தலைவர்களும் அதில் கலந்து கொண்டனர்.

2-வது நாள் விழாவில், இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவிடம் இருந்து, ஜி-20 தலைமையை அதிகாரப்பூர்வ முறையில் பிரதமர் மோடி பெற்று கொண்டார்.

இதன் நிறைவு விழாவில் பேசிய பிரதமர் மோடி, ஜி-20 தலைமையை இந்தியா ஏற்று நடத்துவது என்பது ஒவ்வோர் இந்தியருக்கும் பெருமை அளிக்கும் விசயம். இந்தியாவில் வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் நகரங்களில் ஜி-20 கூட்டங்களை நாங்கள் நடத்துவோம் என கூறினார்.

இதன்படி, இந்தியாவுக்கான ஜி-20 மாநாட்டின் ஓராண்டுக்கான தலைமைத்துவம் கடந்த 1-ந்தேதி முதல் துவங்கியது. இதனையொட்டி, உலக அரசியலில் மிக சவாலான தருணத்தில் ஜி-20 தலைமையை இந்தியா ஏற்றுள்ளது என்று மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் அது தொடர்புடைய கூட்டமொன்றில் பேசும்போது கூறினார்.

இதனை தொடர்ந்து, ஜி-20 தலைமையை இந்திய ஏற்ற நிலையில், ஜி-20 ஷெர்பா கூட்டம் முதன்முறையாக ராஜஸ்தானின் உதய்ப்பூர் நகரில் இன்று தொடங்கி நடைபெறுகிறது.

4 நாட்கள் நடைபெறும் இந்த ஜி-20 ஷெர்பா கூட்டத்தில் பங்கேற்க, ஜி-20 நாடுகள் மற்றும் மற்றும் சர்வதேச அமைப்புகளை சேர்ந்த ஷெர்பா குழுக்கள் விருந்தினர்களாக வருகை தந்து வருகின்றனர். இதில், அவர்கள் உதய்ப்பூர் விமான நிலையத்தில் வந்திறங்கினர்.

அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதுபோன்று 40-க்கும் மேற்பட்ட ஷெர்பா குழுக்கள் வருகை தருகின்றன. அவர்களை இந்திய ஜி-20 ஷெர்பா குழுவின் தலைவர் அமிதாப் கந்த், இன்று முறைப்படி வரவேற்று வருகிறார்.

இதுபற்றி அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், விருந்தினர்களை அன்புடன் வரவேற்பது மற்றும் வரலாற்று பேரழகை கொண்டது என்ற வகையில் ராஜஸ்தான் மாநிலம் உலக புகழ் பெற்றது.

ராஜஸ்தானின் உதய்ப்பூர் நகரில் இருந்து இந்தியாவின் ஜி-20 தலைமையை துவங்குவது என்பது, விருந்தினர்களை கடவுளாக வரவேற்கும் நமது இந்திய பாரம்பரிய நடைமுறையை வெளிப்படுத்தும் அடையாளத்தின் தொடக்கம் ஆகும் என தெரிவித்து உள்ளார்.


Next Story