கர்நாடகா: விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டமும்.... ஈக்தா மைதான சர்ச்சையும்... - முழு விவரம்


கர்நாடகா: விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டமும்.... ஈக்தா மைதான சர்ச்சையும்... - முழு விவரம்
x
தினத்தந்தி 31 Aug 2022 3:32 AM GMT (Updated: 31 Aug 2022 4:03 AM GMT)

இந்து மத கடவுள் விநாயகர் சதுர்த்தி பண்டிகை தொடர்பாக கர்நாடகாவில் உப்பள்ளி மற்றும் சாம்ராஜ்பேட்டை ஈத்கா மைதானங்கள் பேசுபொருளாகியுள்ளன.

பெங்களூரு,

இந்து மத கடவுள் விநாயகர் சதுர்த்தி இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து, பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.

உப்பள்ளி ஈக்தா மைதானம்:

இதனிடையே, கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுன் கித்தூர் ராணி சென்னம்மா சர்க்கிள் அருகே ஈத்கா மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்து மத கடவுள் விநாயகர் சிலை வைக்கப்பட்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டுள்ளது.

இதற்கு இஸ்லாமிய மத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஈத்கா மைதானம் தங்களுக்குரியது என்று போராட்டம் நடத்தினர். மேலும், இது தொடர்பாக இஸ்லாமிய மத அமைப்புகள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.

அனுமதி மறுப்பு:

இதையடுத்து கர்நாடக ஐகோர்ட்டு ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி மறுத்து உத்தரவிட்டுள்ளது. அன்றுமுதல் ஈத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவில்லை.

மீண்டும் அனுமதி:

இந்த நிலையில் ஈத்கா மைதானத்தில் இந்த ஆண்டு விநாயர் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதி அளிக்கும்படி இந்து மத அமைப்பினர், தார்வார் மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்ற தார்வார் மாநகராட்சி உப்பள்ளி ஈத்கா மைதானத்தில் இந்து மத கடவுள் விநாயகர் சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட அனுமதியளித்தது.

ஐகோர்ட்டில் வழக்கு... தீர்ப்பு

உப்பள்ளி ஈக்தா மைதானம் தங்களுக்கு சொந்தமானது எனவும் இந்த மைதானத்தில் இந்து மத கடவுள் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட அனுமதிக்கக்கூடாது எனவும் அஞ்சுமென் இ இஸ்லாம் என்ற இஸ்லாமிய அமைப்பு கர்நாடக ஐகோர்ட்டில் வழக்குத்தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு விநாயகர் சதுர்த்தி விழாவை உப்பள்ளி ஈக்தா மைதானத்தில் கொண்டாட அனுமதித்தது.

சாம்ராஜ்பேட்டை ஈக்தா மைதானம்:

அதேவேளை, பெங்களூருவின் சாம்ராஜ்பேட்டை நகரில் உள்ள ஈக்தா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட ஐகோர்ட்டு அனுமதியளித்ததை எதிர்த்து இஸ்லாமிய வக்பு வாரியம் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தது.

சாம்ராஜ்பேட்டை ஈக்தா மைதான வழக்கில் தீர்ப்பு வெளியான பின், உப்பள்ளி ஈக்தா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்த அனுமதிக்கப்பட்ட உத்தரவு தொடர்பாக மனுதாரர் மேல் முறையீடு செய்யலாம் என்றும் கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

சாம்ராஜ்பேட்டை வழக்கும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு;

இதனையடுத்து, இஸ்லாமிய வக்பு வாரியம் தொடர்ந்த வழக்கில் சாம்ராஜ்பேட்டை ஈக்தா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதித்த கர்நாடக ஐகோர்ட்டின் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று இடைக்கால தடை விதித்தது. சாம்ராஜ்பேட்டை ஈக்தா மைதானம் மாநகராட்சிக்கு சொந்தமானதா? அல்லது வக்பு வாரியத்திற்கு சொந்தமானதா? என பிரச்சினை நீடித்து வருகிறது. மைதானம் யாருக்கு சொந்தமானது என்பதில் பிரச்சினை நீடித்து வருவதால் ஈக்தா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதிக்கமுடியாது என கூறி சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவிட்டது.

சாம்ராஜ்பேட்டை தீர்ப்பும், உப்பள்ளி மேல் முறையீடும்;

சாம்ராஜ்பேட்டை ஈக்தா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்ததை தொடர்ந்து உப்பள்ளி ஈக்தா மைதானத்திலும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட தடை விதிக்க வேண்டுமென கர்நாடக ஐகோர்ட்டில் அஞ்சுமென் இ இஸ்லாம் என்ற இஸ்லாமிய அமைப்பு மீண்டும் மேல் முறையீடு செய்தது.

இந்த வழக்கு நேற்று இரவு கர்நாடக ஐகோர்ட்டில் அவரச வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கு விசாரணை இரவு வரை நீடித்தது.

உப்பள்ளி ஈக்தா மைதானம் தங்களுக்கு சொந்தமானது என கூறிய அஞ்சுமென் இ இஸ்லாம் அமைப்பு அந்த மைதானத்தில் இஸ்லாமிய மத வழிபாடு மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்றும் மாற்று மத வழிபாடுகள் நடத்துக்கூடாது என்றும் மேல் முறையீடு செய்தது.

சாம்ராஜ்பேட்டை ஈக்தா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது போன்றே உப்பள்ளி ஈக்தா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட தடை விதிக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டது.

உப்பள்ளி ஈக்தா மைதான தீர்ப்பு;

இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த கர்நாடக ஐகோர்ட்டு, உப்பள்ளி ஈக்தா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட தடை விதிக்க மறுத்தது. உப்பள்ளி ஈக்தா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடலாம் என அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

சாம்ராஜ்பேட்டை ஈக்தா மைதான விவகாரம் வேறு, உப்பள்ளி ஈக்தா மைதான விவகாரம் வேறு என ஐகோர்ட்டு தெரிவித்தது. சாம்ராஜ்பேட்டை ஈக்தா மைதானம் யாருக்கு சொந்தமானது என்பதில் மாநகராட்சிக்கும் வக்பு வாரியத்திற்கும் இடையே வழக்கு நடைபெற்று வருகிறது.

ஆனால், உப்பள்ளி ஈக்தா மைதானம் அரசுக்கு சொந்தமானது. இதில் எந்த பிரச்சினையும் இல்லை. இந்த நிலத்தை மனுதாரரான அஞ்சுமென் இ இஸ்லாம் அமைப்பு மாநகராட்சியிடமிருந்து இஸ்லாமிய மத பண்டிகைகளான பக்ரீத் மற்றும் ரம்ஜான் ஆகிய நாட்களில் மட்டும் மத வழிபாடு நடத்த ஆண்டுக்கு 1 ரூபாய் என்ற மதிப்பில் 999 ஆண்டுக்கு குத்தகைக்கு எடுத்துள்ளது.

இதனால், அரசுக்கு சொந்தமான உப்பள்ளி ஈக்தா மைதானத்தை அஞ்சுமென் இ இஸ்லாம் அமைப்பு உரிமை கொண்டாட முடியாது. ஆகையால், உப்பள்ளி ஈக்தா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதியளித்து கர்நாடக ஐகோர்ட்டு நள்ளிரவில் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

ஐகோர்ட்டு அனுமதியளித்ததையடுத்து, உப்பள்ளி ஈக்தா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஒட்டுமொத்தமாக சாம்ராஜ்பேட்டை ஈக்தா மைதானம் யாருக்கு சொந்தமானது என பிரச்சினை நீடித்து வருவதால் அங்கு விநாயகர் சதுர்த்தி கொண்டாட சுப்ரீம் கோர்ட்டு அனுமதி மறுத்தது. அதேவேளை, உப்பள்ளி ஈக்தா மைதானம் அரசுக்கு சொந்தமானது என்பதால் அங்கு விநாயகர் சதுர்த்தி கொண்டாட ஐகோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது.

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டமும், ஈக்தா மைதானங்களும் தற்போது கர்நாடக அரசியலில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.


Next Story