இந்தியாவில் மீண்டும் வருகிறது கரீனா பிரீ பயர் கேம்..! இந்த முறை தல தோனியுடன் விளையாடலாம்..!


இந்தியாவில் மீண்டும் வருகிறது கரீனா பிரீ பயர் கேம்..! இந்த முறை தல தோனியுடன் விளையாடலாம்..!
x

பாதுகாப்பு அச்சுறுத்தல் என வகைப்படுத்தப்பட்டு மத்திய அரசால் தடை செய்யப்பட்ட செயலிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

கரீனா பிரீ பயர் என்ற ஆன்லைன் விளையாட்டு இளைஞர்களிடையே மிகவும் பிரபலமான போர்க்கள விளையாட்டாகும். இந்த விளையாட்டில் ஈடுபடுவோர் தனியாகவோ, குழுவாகவோ தங்களுக்கு பிடித்தமான ஆயுதங்களை தேர்ந்தெடுத்து ஒருவரையொருவர் தாக்குதல் நடத்தலாம். கடைசியாக தப்பித்து உயிர்பிழைக்கும் நபரே வெற்றியாளர் ஆவார்.

இதில் ஒவ்வொரு நபருக்கும் ஒரு தரவரிசை இருக்கும். அவர்கள் விளையாட்டில் வெற்றி பெற, தரவரிசை முன்னேறிக் கொண்டே இருக்கும். சிங்கப்பூரைச் சேர்ந்த கரீனா நிறுவனம் இந்த கேமை உருவாக்கி உள்ளது.

இந்தியாவில் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த விளையாட்டை மத்திய அரசு கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தடை செய்தது. இந்த செயலியின் மூலம் பயனர்களின் தகவல்களை சேகரிக்க முடியும் என்பதால் "பாதுகாப்பு அச்சுறுத்தல்" என வகைப்படுத்தப்பட்டு மத்திய அரசால் தடை செய்யப்பட்ட செயலிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

அதன்பின்னர் இந்திய அரசின் சட்டத்திற்கு உட்பட்டு செயலியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் தனித்துவமான வசதிகளுடன் பிரீ பயர் இந்தியா என்ற பெயரில் மீண்டும் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.

இதற்கான அறிவிப்பை, இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதர் சைமன் வாங் முன்னிலையில், கரீனாவின் இணை நிறுவனர் கேங் யே மற்றும் யோட்டா இன்ப்ராஸ்ட்ரக்சர் இணை நிறுவனரும் தலைவருமான தர்ஷன் ஹிராநந்தனி ஆகியோர் வெளியிட்டனர்.

பாதுகாப்பான மற்றும் சுவாரஸ்யமான கேமிங் அனுபவத்தை உறுதிசெய்யும் வகையில் புதிய அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்த கேமின் தூதராக கிரிக்கெட் ஜாம்பவான் எம்எஸ் தோனியை கரீனா நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் தோனி 'தல' என்ற பெயரில் விளையாடக்கூடிய கதாபாத்திரமாக இணைக்கப்பட்டிருக்கிறார். இவர் தவிர கால்பந்து கேப்டன் சுனில் சேத்ரி, பேட்மிண்டன் சாம்பியன் சாய்னா நேவால், டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ் மற்றும் கபடி சாம்பியன் ராகுல் சவுத்ரி போன்ற விளையாட்டு பிரபலங்களும் இந்த விளையாட்டில் இடம்பெறுவார்கள்.

இந்த கேமை இந்தியாவில் செப்டம்பர் 5ம்தேதி முதல் டவுன்லோடு செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் விளையாடுவோர் தங்களுக்குப் பிடித்தமான விளையாட்டு பிரபலங்களுடன் இணைந்து விளையாடி மகிழ்வதுடன், மேம்பட்ட மற்றும் பாதுகாப்பான கேமிங் அனுபவத்தை பெறலாம் என கரீனா நிறுவனம் தெரிவித்துள்ளது.


Next Story