டெல்லி ஆசிட் வீச்சு சம்பவம்: குற்றவாளிகளை பொதுவெளியில் தூக்கிலிட வேண்டும் - கவுதம் கம்பீர்


டெல்லி ஆசிட் வீச்சு சம்பவம்: குற்றவாளிகளை  பொதுவெளியில் தூக்கிலிட வேண்டும் - கவுதம் கம்பீர்
x

டெல்லியில் சிறுமி மீது ஆசிட் வீசியவர்களை பொதுவெளியில் வைத்து தூக்கிலிட வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், எம்.பி.யுமான கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லி தெற்கு துவாரகா பகுதியில் இன்று காலை 9 மணியளவில் 17 வயது பள்ளி மாணவி தனது சகோதரியுடன் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த இருவர் மாணவி மீது ஆசிட் வீசி விட்டு தப்பிச் சென்றனர். இதில் அவரது முகம், கண்களில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

இதை தொடர்ந்து அந்த மாணவி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. சிறுமி மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவத்தையடுத்து டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஆசிட் வீசிய சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் சிறுமி மீது ஆசிட் வீசியவர்களை பொதுவெளியில் வைத்து தூக்கிலிட வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், எம்.பி.யுமான கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'வெறும் வார்த்தைகளால் எந்த நீதியையும் நம்மால் வழங்க முடியாது. இந்த மிருகங்களுக்கு அளவிட முடியாத வலியைப் பற்றிய பயத்தை நாம் ஏற்படுத்த வேண்டும். துவாரகாவில் பள்ளி மாணவி மீது ஆசிட் வீசிய இளைஞர்களை பொதுவெளியில் பகிரங்கமாக அதிகாரிகள் தூக்கிலிட வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.



Next Story