சிறுத்தை தாக்கி இளம்பெண் சாவு
டி.நரசிப்புராவில் சிறுத்தை தாக்கி இளம்பெண் உயிரிழந்தார்.
மைசூரு:
சிறுத்தை
மைசூரு மாவட்டம் டி.நரசிப்புரா தாலுகா எஸ்.ஹெப்பேஉண்டி கிராமத்தை சேர்ந்தவர் மேகனா (வயது 21). இந்த கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. மேகனாவின் வீடு தான் அந்த கிராமத்தில் கடைசி வீடாகும். அவரது வீட்டுக்கு பின்புறம் வனப்பகுதி அமைந்துள்ளது. மேகனா மற்றும் அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் வனப்பகுதியில் இயற்கை உபாதை கழிக்க செல்வது வழக்கம்.
அதேபோல், நேற்று மாலை 6.30 மணி அளவில் மேகனா, இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டின் பின்புறம் உள்ள வனப்பகுதிக்கு சென்றுள்ளார். அந்த சமயத்தில் அங்கு சிறுத்தை ஒன்று வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மேகனா, அங்கிருந்து தப்பியோட முயன்றார்.
இளம்பெண் சாவு
ஆனாலும் சிறுத்தை அவர் மீது பாய்ந்து தாக்கியது. ேமலும் அவரை கடித்து குதறியது. இதில் பலத்த காயம் அடைந்த மேகனா, காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டார். அவரது கூச்சல் சத்தத்தை கேட்டு அங்கிருந்தவர்கள் விரைந்து வந்தனர்.
ஆட்கள் வருவதை அறிந்ததும் சிறுத்தை அங்கிருந்து வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது. சிறுத்தை தாக்கியதில் பலத்த காயம் அடைந்த மேகனா, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், மேகனாவை மீட்டு டி.நரசிப்புரா அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தண்டோரா மூலம் எச்சரிக்கை
இதுபற்றிய தகவல் அறிந்ததும் வனத்துறையினர் எஸ்.ஹெப்பஉண்டி கிராமத்துக்கு சென்று பார்வையிட்டனர். மேலும் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்தனர். அப்போது அந்தப்பகுதி மக்கள், சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உயிரிழந்த மேகனாவின் குடும்பத்துக்கு தக்க நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்ற வனத்துறையினர், சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.
மேலும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து டி.நரசிப்புரா போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.