மணிஷ் சிசோடியா பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் காங்கிரஸ் கட்சி போராட்டம்
முறைகேடு புகாருக்கு உள்ளாகியுள்ள மணிஷ் சிசோடியா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.
டெல்லியில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. அதில், துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியா, கல்வி, ஆயத்தீர்வை உள்ளிட்ட இலாகாக்களை கவனித்து வருகிறார்.கடந்த ஆண்டு நவம்பர் மாதம், மதுபான ஆயத்தீர்வை கொள்கை வகுக்கப்பட்டது. அக்கொள்கை வகுத்ததிலும், அமல்படுத்தியதிலும் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. மதுபான உரிமங்கள் பெற்றவர்களுக்கு திட்டமிட்டு ஆதாயங்கள் அளிக்கப்பட்டதாகவும், டெல்லி ஆயத்தீர்வை சட்டம் மற்றும் விதிமுறைகள் மீறப்பட்டதாகவும் சர்ச்சை எழுந்தது.
இந்த சட்ட விதிமீறல்கள் குறித்து டெல்லி தலைமை செயலாளர் அறிக்கை அளித்ததன்பேரில், சி.பி.ஐ. விசாரணை நடத்த கவர்னர் வி.கே.சக்சேனா உத்தரவிட்டார். அதையடுத்து, இந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.
இந்தநிலையில், இவ்வழக்கில் டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா வீடு, ஆயத்தீர்வை முன்னாள் ஆணையர் அரவா கோபிகிருஷ்ணா மற்றும் 2 அரசு அதிகாரிகளின் வீடுகள் உள்பட 31 இடங்களில் சி.பி.ஐ. நேற்று அதிரடி சோதனை நடத்தியது. தொடர்ந்து மணிஷ் சிசோடியா உள்பட 16 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்த நிலையில் முறைகேடு புகாருக்கு உள்ளாகியுள்ள மணிஷ் சிசோடியா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. டெல்லி காங்கிரஸ் அலுவலகத்திலிருந்து அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சிசோடியாவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவாறு ஆம் ஆத்மி தலைமையகத்தை நோக்கி காங்கிரஸ் கட்சியினர் பேரணியாக சென்றனர். மந்திரி சபையில் இருந்து சிசோடியாவை நீக்க வேண்டும் என்று டெல்லி காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது.