முதல்கட்ட பஞ்சரத்னா யாத்திரைக்கு நல்ல வரவேற்பு; குமாரசாமி பேட்டி


முதல்கட்ட பஞ்சரத்னா யாத்திரைக்கு நல்ல வரவேற்பு; குமாரசாமி பேட்டி
x
தினத்தந்தி 5 Jan 2023 12:15 AM IST (Updated: 5 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

முதல்கட்ட பஞ்சரத்னா யாத்திரைக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததாக குமாரசாமி கூறியுள்ளார்.

பெங்களூரு:

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

வரவேற்பு கிடைக்கவில்லை

எங்கள் கட்சியின் 2-வது கட்ட பஞ்சரத்னா யாத்திரை நாளை (இன்று) பீதரில் தொடங்குகிறது. வட கர்நாடகத்தில் குறைந்தது 35 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று முயற்சி செய்கிறோம். நாங்கள் எங்களின் திட்டங்களை முன்வைத்து மக்களை சந்திக்கிறோம். யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்க மாட்டேன். முதல்கட்டமாக நான் மேற்கொண்ட யாத்திரைக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

34 தொகுதிகளில் யாத்திரை நடத்தினேன். அந்த தொகுதிகளில் எங்கள் கட்சி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. நான் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் அபார வரவேற்பு வழங்கினர். சில இடங்களில் ஹெலிகாப்டரில் பூக்களை தூவினர். இதை கண்டு நான் வியப்படைந்தேன். இன்னும் சில இடங்களில் பிரமாண்டமான பழ மாலைகளையும், ருத்ராட்சை மாலையும் அணிவித்து என்னை ஆச்சரியப்படுத்தினர். நான் முதல்-மந்திரியாக இருந்தபோது கூட இந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

காப்பாற்ற முடியாது

கர்நாடகத்தை பா.ஜனதா தலைவர்களால் காப்பாற்ற முடியாது. பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய சாண்ட்ரோ ரவி என்பவருடன் மந்திரிகள் சிலர் தொடர்பு வைத்துள்ளனர். எனது தலைமையில் நடைபெற்ற கூட்டணி ஆட்சியை கவிழ்க்க இங்கிருந்து 17 எம்.எல்.ஏ.க்களை மும்பைக்கு அழைத்து சென்ற நபர் யார்?. தொழில் அதிபர் பிரதீப் என்பவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் எழுதிய கடிதத்தில் பா.ஜனதாவை சேர்ந்த அரவிந்த் லிம்பாவளி எம்.எல்.ஏ.வின் பெயர் உள்ளது.

இதுகுறித்த வழக்கில் அரவிந்த் லிம்பாளியுடன் கோபி என்பவரின் பெயரும் இடம் பெற்றுள்ளது. எனக்கு கிடைத்துள்ள தகவல்படி கோபி என்பவர் மூலம் கட்டுமான தொழில் அதிபர்களிடம் இருந்து ரூ.60 கோடி வரை வசூலிக்கப்பட்டுள்ளது. இதனால் அரவிந்த் லிம்பாளி மந்திரி பதவியை இழந்தாரா?. இதுகுறித்து மக்களுக்கு தெரிய வேண்டும்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.


Next Story