அரசு உண்டு உறைவிட பள்ளியில் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடிய போலீஸ் சூப்பிரண்டு


அரசு உண்டு உறைவிட பள்ளியில் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடிய போலீஸ் சூப்பிரண்டு
x

அரசு உண்டு உறைவிட பள்ளியில் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடிய போலீஸ் சூப்பிரண்டு அக்‌ஷய் மச்சீந்திரா, சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

சிக்கமகளூரு;

கலந்துரையாடல்

சிக்கமகளூரு டவுனில் கத்ரிமித்ரி பகுதியில் பிற்படுத்தபட்டோருக்கான அரசு உண்டு உறைவிட பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அக்‌ஷய் மச்சீந்திரா நேரில் சென்று பார்வையிட்டாா். பின்னர் அவர் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

அப்போது அவர், போதைப்பொருள் பயன்படுத்தினால் நடக்கும் விபரீதங்கள் குறித்து எடுத்துரைத்தார். மேலும் சமூக வலைத்தளங்களை பாதுகாப்பாக கையாள்வது குறித்தும் மாணவ-மாணவிகளிடம் விளக்கினார். மாணவ-மாணவிகளும் தங்கள் கேள்விகளை போலீஸ் சூப்பிரண்டு அக்‌ஷய் மச்சீந்திராவிடம் கேட்டு தெரிந்து கொண்டனர்.

எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்

இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு அக்‌ஷய் மச்சீந்திரா பேசுகையில், 'போதைப்பொருள் நம் சமூகத்தை சீரழிக்கும் கொடிய நோய். போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும். போதைப்பொருள் பழக்கத்துக்கு மாணவ-மாணவிகள் அடிமையாக கூடாது. தற்போதைய தலைமுறையில் சைபர் கிரைம் குற்றங்களும் அதிகரித்து வருகிறது.

தற்போதைய காலக்கட்டத்தில் அனைவரது கைகளிலும் ஸ்மார்ட் போன் உள்ளது. மாணவ-மாணவிகள் முகநூல், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் சைபர் கிரைம் நடக்க வாய்ப்பு உள்ளது. இதனால் சமூக வலைத்தளங்களை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்.

சமூக வலைத்தளங்களை அதிகமாக பயன்படுத்துவதால் மாணவ-மாணவிகளால் பாடங்களில் சரியாக கவனம் செலுத்த முடியாமல் உள்ளது. இதனால் மாணவ-மாணவிகளின் எதிர்காலம் பாதிக்கப்படும்' என்றார்.


Next Story