கச்சா எண்ணெய் மீதான சிறப்பு கூடுதல் கலால் வரியை உயர்த்தியது மத்திய அரசு


கச்சா எண்ணெய் மீதான சிறப்பு கூடுதல் கலால் வரியை உயர்த்தியது மத்திய அரசு
x

வழக்கத்திற்கு மாறாக சாதகமான சந்தை நிலைமைகள் காரணமாக, அதிக லாபம் ஈட்டியதாக கருதப்படும் வணிகங்களின் மீது விதிக்கப்படும் வரி திடீர் லாப வரி ஆகும்.

புதுடெல்லி:

உள்நாட்டில் தயாரிக்கப்படும் கச்சா எண்ணெய் மீதான திடீர் லாப வரியை (விண்ட்ஃபால் வரி) மத்திய அரசு உயர்த்தி உள்ளது. கச்சா எண்ணெய் ஏற்றுமதி மீதான இந்த வரியை டன்னுக்கு ரூ.3,300-ல் இருந்து ரூ.4,600 ஆக உயர்த்தி உள்ளது. சிறப்பு கூடுதல் கலால் வரி (SAED) என்ற பெயரில் இந்த வரி விதிக்கப்படுகிறது.

அதேசமயம், டீசல் ஏற்றுமதி மீதான சிறப்பு கூடுதல் கலால் வரியானது, ஒரு லிட்டருக்கு 1.50 ரூபாயில் இருந்து பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் விமான எரிபொருள் அல்லது ஏ.டி.எப். மீதான வரியும் பூஜ்ஜியமாக நீடிக்கிறது. இந்த புதிய வரி விதிப்பு இன்று முதல் (மார்ச் 1) நடைமுறைக்கு வந்துள்ளது.

திடீர் லாப வரி (விண்ட்பால் வரி) என்பது, வழக்கத்திற்கு மாறாக சாதகமான சந்தை நிலைமைகள் காரணமாக, அதிக லாபம் ஈட்டியதாக கருதப்படும் வணிகங்களின் மீது விதிக்கப்படும் வரி ஆகும். உள்நாட்டு சந்தையில் எரிசக்தி பொருட்களின் பற்றாக்குறையை சமாளிக்க, மத்திய அரசு கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி எரிசக்தி நிறுவனங்களின் திடீர் லாபத்திற்கு வரி விதிக்கும் நடைமுறையை அறிமுகம் செய்தது. அதாவது, பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதியில் சிறப்பு கூடுதல் கலால் வரியை சேர்த்தது.

15 நாட்களுக்கு ஒருமுறை இந்த வரி விகிதங்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டு மாற்றியமைக்கப்படுகின்றன. முந்தைய இரண்டு வாரங்களில் சராசரி எண்ணெய் விலைகளின் அடிப்படையில் இந்த மதிப்பாய்வு மேற்கொள்ளப்படுகிறது.


Next Story