ஐகோர்ட்டு தீர்ப்பு எதிரொலி: ஊழல் தடுப்பு படையை ரத்து செய்து கர்நாடக அரசு உத்தரவு
ஐகோர்ட்டு தீர்ப்ைப தொடர்ந்து ஊழல் தடுப்பு படையை ரத்து செய்து கர்நாடக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் அனைத்து வழக்குகளும் லோக்அயுக்தாவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
பெங்களூரு: ஐகோர்ட்டு தீர்ப்ைப தொடர்ந்து ஊழல் தடுப்பு படையை ரத்து செய்து கர்நாடக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் அனைத்து வழக்குகளும் லோக்அயுக்தாவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஊழல் தடுப்பு படை ரத்து
கர்நாடகத்தில் லோக்அயுக்தா அமைப்பு கடந்த 1985-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. மாநிலத்தில் அரசு துறைகளில் பணியாற்றும் ஊழல் அதிகாரிகள், முறைகேட்டில் ஈடுபடும் மக்கள் பிரதிநிதிகளுக்கு அந்த அமைப்பு சிம்மசொப்பனாக திகழ்ந்தது. இந்த நிலையில் கர்நாடகத்தில் சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது கடந்த 2016-ம் ஆண்டு ஊழல் தடுப்பு படை உருவாக்கப்பட்டது. இதன் மூலம் லோக்அயுக்தாவின் அதிகாரம் பறிக்கப்பட்டது.
கர்நாடக அரசின் இந்த முடிவுக்கு எதிராக கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. நீதிபதி வீரப்பா, ஹேமலேகா ஆகியோர் அடங்கிய அமர்வு, ஊழல் தடுப்பு படையை ரத்து செய்து கடந்த ஆகஸ்டு மாதம் 11-ந் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை ஏற்பது குறித்து அரசு ஆலோசித்து வந்தது.
லோக்அயுக்தாவுக்கு மாற்றம்
இந்த நிலையில், கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை ஏற்று, ஊழல் தடுப்பு படையை ரத்து செய்து, அதில் இருந்த அனைத்து வழக்குகளையும் லோக்அயுக்தாவுக்கு மாற்றி கர்நாடக அரசு நேற்று அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளது.
இதன் மூலம் லோக்அயுக்தா அமைப்புக்கு முன்பு இருந்தது போலவே முழு அதிகாரம் கிடைத்துள்ளது. லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மற்றும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிக்கும் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளின் வீடுகளில் லோக்அயுக்தா போலீசார் சோதனை நடத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.