குஜராத்: 1 லட்சம் பேர் யோகா செய்து கின்னஸ் உலக சாதனை; பிரதமர் மோடி வாழ்த்து


குஜராத்: 1 லட்சம் பேர் யோகா செய்து கின்னஸ் உலக சாதனை; பிரதமர் மோடி வாழ்த்து
x

குஜராத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் யோகா செய்து புதிய கின்னஸ் உலக சாதனை படைத்ததற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

சூரத்,

சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் நேற்று உற்சாகமுடன் கடைப்பிடிக்கப்பட்டது. பிரதமர் மோடியின் வேண்டுகோளின்படி, ஆண்டுதோறும் ஜூன் 21-ந்தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படும் என்று கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐ.நா. பொதுச்சபை அறிவித்தது. முதல்முறையாக, 2015-ம் ஆண்டு ஜூன் 21-ந்தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

இதன்படி, இந்த ஆண்டு 9-வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு வசுதேவ குடும்பகம் என்ற கருப்பொருள் அடிப்படையில் இந்த தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

இதனை முன்னிட்டு நாடு முழுவதும் மக்கள் ஆர்வமுடன் காலை முதலே யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். மத்திய மந்திரிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், திரை துறை, விளையாட்டு துறை உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் யோகா பயிற்சி மேற்கொண்டனர்.

சர்வதேச யோகா தினத்திற்கான தேசிய நிகழ்ச்சி, மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கார், மத்திய மந்திரிகள் பிரகலாத் சிங் பட்டேல், சர்பானந்தா சோனோவால், மத்திய பிரதேச கவர்னர் மங்குபாய் பட்டேல் மற்றும் பிற முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், குஜராத்தின் சூரத் நகரில் மாநில அளவிலான சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் புதிய கின்னஸ் உலக சாதனை படைக்கும் நோக்கில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி யோகா பயிற்சி மேற்கொண்டனர்.

ஓரிடத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் யோக பயிற்சியை மேற்கொண்டது பற்றி குஜராத் மாநில உள்துறை மந்திரி ஹர்ஷ சாங்கவி இதனை பாராட்டி டுவிட்டரில் பகிர்ந்து உள்ளார். அந்த செய்தியில், 9-வது சர்வதேச யோகா தினத்தில், நடந்த இந்நிகழ்ச்சியில் 1 லட்சத்திற்கும் கூடுதலானோர் பங்கேற்றனர்.

இந்த குறிப்பிடத்தக்க சாதனை, அனைவருக்கும் யோகா என்ற பிரதமர் மோடிஜியின் அழைப்பை ஏற்றதற்கான ஒரு வெளிப்படையான சான்று என அவர் தெரிவித்து உள்ளார். அந்த டுவிட் பதிவை பிரதமர் மோடி பகிர்ந்து கின்னஸ் உலக சாதனை படைத்ததற்காக சூரத்துக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.


Next Story