நிழலுலக தாதா சோட்டா ராஜன் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர்; 6 பேர் மீது பாய்ந்தது வழக்கு


நிழலுலக தாதா சோட்டா ராஜன் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர்; 6 பேர் மீது பாய்ந்தது வழக்கு
x

நிழலுலக தாதா சோட்டா ராஜனின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர் ஒட்டி, கபடி போட்டியும் நடத்தி உள்ளனர்.



புனே,


மும்பையில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தபோது, நிழலுலக தாதா தாவூத் இப்ராகிமின் கும்பலில் தொடர்பில் இருந்தவர் சோட்டா ராஜன். அதன்பின் தனியாக பிரிந்து சென்று, அவருக்கென்று ஒரு சாம்ராஜ்ஜியம் உருவாக்கினார்.

20 ஆண்டுகளாக மும்பையில் வசித்து வந்த இவர், மும்பை குண்டுவெடிப்பு, கொலை, ஆள் கடத்தல், போதை மருந்து கடத்தல், குண்டுவெடிப்பு என இவர் மீது இந்தியாவில் பல்வேறு வழக்குகள் உள்ளன. திகார் சிறையில் கைதியாக அவர் அடைப்பட்டு உள்ளார்.

இந்நிலையில், நிழலுலக தாதா சோட்டா ராஜனின் பிறந்த நாளை சமீபத்தில் மும்பையின் மலாட் நகரில் சிலர் போஸ்டர் ஒட்டி கொண்டாடி உள்ளனர். மும்பையில் 20 ஆண்டுகள் வாழ்ந்தவரான அவருக்கு என சில ஆதரவாளர்கள் வசித்து வருகின்றனர் என கூறப்படுகிறது.

அவரால் நேரடியாகவோ அல்லது மறைமுகம் ஆகவோ பயன்பெற்ற அவர்களில் சிலர் இந்த செயலில் ஈடுபட்டு இருக்க கூடும் என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, இதுபற்றிய தகவல் அறிந்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதில், சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர். அவர்களில் ஒருவர் சோட்டா ராஜன் பிறந்த நாளையொட்டி கபடி போட்டி ஒன்றையும் நடத்தி உள்ளார் என கூறப்படுகிறது.

மும்பையில் குற்ற புலனாய்வு நிருபராக பணியாற்றி வந்த ஜே டே (வயது 56) என்ற பத்திரிகையாளர் கடந்த 2011-ம் ஆண்டு ஜூன் மாதம் 11-ந்தேதி மும்பை பவாய் அருகே பணி முடிந்து வீடு திரும்பி கொண்டு இருந்தபோது, 2 மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத மர்ம கும்பல் இவரை மறித்து துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தது.

சோட்டா ராஜனுக்கு எதிர்மறையான கருத்துகளை அவர் கட்டுரையில் எழுதி வந்துள்ளார். சோட்டா ராஜனின் உடல் நிலை, சரிந்து வரும் செல்வாக்கு போன்றவை குறித்து ஜே டே எழுதி வந்ததால், இந்த கொலை நடைபெற்று உள்ளது என போலீசார் கண்டறிந்தனர். கொலை நடக்கும் போது ஜே டே ஆங்கில இதழ் ஒன்றின் ஆசிரியராக பணியாற்றினார்.

10 ஆண்டுகளாக போலீசாரால் தேடப்பட்ட அவரை, இந்தோனேசியா நாட்டின் பாலி தீவில் பதுங்கி இருந்தபோது, கடந்த 2015-ம் ஆண்டு கைது செய்து, அக்டோபர் மாதம் நாடு கடத்தப்பட்டு இந்தியா கொண்டு வரப்பட்டார். அவர் மீது ஜே டே கொலை உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் சோட்டா ராஜன் உள்பட 12 பேரும் கைது செய்யப்பட்டனர். தாதா சோட்டா ராஜன் உள்பட 9 பேரை குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்து, ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு கூறினார். மேலும் குற்றவாளிகளுக்கு தலா ரூ.26 லட்சம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.


Next Story