இமாசலபிரதேச தேர்தல்: உலகின் மிக உயரமான வாக்குச் சாவடியில் 98.08 சதவீத வாக்குகள் பதிவு!


இமாசலபிரதேச தேர்தல்: உலகின் மிக உயரமான வாக்குச் சாவடியில் 98.08 சதவீத வாக்குகள் பதிவு!
x
தினத்தந்தி 12 Nov 2022 3:49 PM GMT (Updated: 12 Nov 2022 3:53 PM GMT)

இயற்கை எழில் கொஞ்சும் இமாசலபிரதேச தேர்தலில் 65.5 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சிம்லா,

இயற்கை எழில் கொஞ்சும் இமாசலபிரதேச மாநிலத்தில் முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்குர் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது.

அங்கு 68 இடங்களைக் கொண்ட சட்டசபைக்கு நவம்பர் 12-ந் தேதி (இன்று) தேர்தல் நடத்தப்படுவதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது. இந்தத் தேர்தலில் 412 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம் நிச்சயிக்கப்படுகிறது. இவர்களில் 24 பேர் மட்டுமே பெண்கள் ஆவார்கள்.

இங்கு 55 லட்சத்து 92 ஆயிரத்து 828 வாக்காளர்கள் உள்ளனர். பெண் வாக்காளர்களை விட (27 லட்சத்து 37 ஆயிரத்து 845), ஆண் வாக்காளர்கள் அதிகம் ( 28 லட்சத்து 54 ஆயிரத்து 945). இந்த மாநிலத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் 38 பேர் உள்ளனர். இவர்களுக்காக 7,881 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

பாரதீய ஜனதா கட்சியும், காங்கிரசும் மொத்தம் உள்ள 68 தொகுதிகளிலும் வேட்பாளர்களை களமிறக்கி உள்ளன. ஆம் ஆத்மி கட்சியும் அத்தனை இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறது. இடதுசாரி கட்சிகள் 12 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன.

ஆனாலும் பா.ஜ.க.வுக்கும், காங்கிரசுக்கும் இடையேதான் 'நீயா, நானா?' என்கிற அளவுக்கு கடும் போட்டி நிலவுகிறது.வாக்குப்பதிவுக்கு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த தேர்தலில் சுவாரசியமான அம்சமாக, உலகிலேயே மிக உயரமான வாக்குச் சாவடி மையம் இமாச்சலப் பிரதேசத்தில் அமைந்துள்ளது என்பது பலருக்கும் தெரியாத விஷயம்.

இமயமலைத் தொடர்களால் சூழ்ந்துள்ள இமாச்சலப் பிரதேசத்தில் (தாஷிகங்க்)'தஷீகங்க்' என்ற மலை பகுதி உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 15,256 அடி உயரத்தில் உள்ள இந்த பகுதியில் வெறும் 52 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர்.

இருப்பினும், அங்குள்ள மக்கள் வாக்களிக்க வசதியாக வாக்குச்சாவடி மையத்தை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது.மின்னணு வாக்கு எந்திரங்கள் உள்ளிட்ட சாதனங்கள், ஓட்டுப்பதிவுக்கு தேவையான பிற பொருட்கள் போய்ச் சேர்ந்தன.

தாஷிகங்க் வாக்குச்சாவடியில் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணியுடன் நிறைவடைந்த வாக்குப்பதிவில் மொத்தமுள்ள 52 வாக்காளர்களில், 51 பேர் வாக்களித்தனர். இதன்மூலம், அங்கு சுமார் 98.08 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இமாச்சலப் பிரதேச தேர்தலில் 65.5 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.இன்று (சனிக்கிழமை) பதிவாகிற வாக்குகள், அடுத்த மாதம் 8-ந் தேதி குஜராத் சட்டசபை தேர்தல் வாக்குகளுடன் எண்ணப்படும். அன்று பிற்பகலில் இமாசலபிரதேசத்தை மீண்டும் பா.ஜ.க. ஆளுமா அல்லது அந்தக் கட்சியிடம் இருந்து காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றுமா என தெரிய வந்து விடும்.


Next Story