சிரியாவுக்கான மனிதநேய உதவிகள் தொடரும்: மத்திய மந்திரி ஜெய்சங்கர்
சிரியாவுக்கான மனிதநேய உதவிகள் தொடரும் என மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
சிரியாவின் வெளிவிவகார மந்திரி டாக்டர் பைசல் மேகதாத் வருகிற 21-ந்தேதி வரை இந்தியாவில் 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். வெளியுறவு மந்திரியாக அவரது முதல் பயணம் இதுவாகும்.
அவரை மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் வரவேற்று நேற்று இருதரப்பு விவகாரங்கள் பற்றி பேசினார். இருவரும் நடப்பு இருதரப்பு உறவுகள் பற்றி ஆய்வு செய்ததுடன், மண்டல மற்றும் சர்வதேச விவகாரங்களில் பரஸ்பர விருப்பம் பற்றி ஆலோசனை மேற்கொண்டனர் என மத்திய வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
கொரோனா பெருந்தொற்று காலம் உள்பட உணவு மற்றும் மருந்து பொருட்கள் அவ்வப்போது சிரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன என்றும் அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இருதரப்பு மற்றும் பலதரப்பு வழிகளில் மனிதநேய, தொழில்நுட்ப மற்றும் வளர்ச்சிக்கான உதவிகளை தொடர்ந்து பல ஆண்டுகளாக இந்தியா செய்து வருகிறது.
இந்தியாவிடம் இருந்து மருந்துகள் மற்றும் செயற்கை உறுப்புகள் உள்பட சிரியாவுக்கான மனிதநேய உதவிகள் தொடரும் என நேற்று மாலை நடந்த சந்திப்பில் சிரியாவுக்கு உறுதி அளிக்கப்பட்டது என மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.