"ஆணவக் கொலையால் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான இளம் வயதினர் உயிரிழக்கின்றனர்" - சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி வேதனை


ஆணவக் கொலையால் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான இளம் வயதினர் உயிரிழக்கின்றனர் - சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி வேதனை
x

ஆண்டுதோறும் சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்வதாலேயே நூற்றுக் கணக்கானோர் உயிரிழப்பதாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.

மும்பை,

மும்பை பார் கவுன்சில் சார்பில் நடைபெற்ற 'சட்டமும் நன்நெறியும்' என்ற தலைப்பிலான நிகழ்ச்சியில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது;-

"நாட்டில் ஆணவக் கொலைகளால் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான இளம் வயதினர் உயிரிழக்கின்றனர். சாதி மாறி மலரும் நேசத்திற்காகவே பல உயிர்கள் பறிபோகின்றன. நாட்டில் இன்றும் ஒடுக்கப்பட்ட நலிந்த மக்கள், பெரும்பான்மை சமூகத்தினரின் அடக்குமுறையால் தங்கள் விருப்பம்போல் வாழ இயலாத நிலையில் உள்ளனர்.

நலிந்தோரின் கலாச்சாரத்தை ஆதிக்க சக்தியினர் உடைத்தெறுகின்றனர். எளியோரின் கலாச்சாரம் சில நேரங்களில் அரசாங்க அமைப்புகளாலும் சிதைக்கப்படுகிறது. நலிந்தோர் மேலும் மேலும் விளிம்புநிலைக்கு தள்ளப்படுகின்றனர். சமூக கட்டமைப்பால் கடைநிலையில் உள்ள ஒடுக்கப்பட்டோரின் விருப்பங்கள் நிறைவேறுவதெல்லாம் மாயையாகத் தான் உள்ளது.

எனக்கு எது நன்னெறியாக இருக்கிறதோ அது உங்களுக்கும் நன்னெறியாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லையே? உத்தரப் பிரதேசத்தில் 1991-ல் 15 வயது சிறுமி ஒருவர் கொல்லப்பட்டார். அதை நியாயப்படுத்தி ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. அந்த கட்டுரையில், கிராம மக்கள் 15 வயது சிறுமியின் படுகொலையை ஏற்றுக் கொண்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

சமூகத்தின் நடத்தை விதிகளின்படி சரியென்று அவர்கள் ஏற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பகுத்தறிவாளர்களுக்கு அது நிச்சயமாக நடத்தை விதிகளாக இருக்காது. ஆண்டுதோறும் சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்வதாலேயே நூற்றுக் கணக்கானோர் உயிரிழக்கின்றனர். முற்போக்கு அரசியல் சாசனம் தான் நம்மை வழி நடத்திச் செல்லும் சக்தி"

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story