கள்ளத்தொடர்பை கைவிட கணவர் மறுப்பு


கள்ளத்தொடர்பை கைவிட கணவர் மறுப்பு
x
தினத்தந்தி 21 Dec 2022 12:15 AM IST (Updated: 21 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

கணவர் கள்ளத்தொடர்பை கைவிட மறுத்ததால், மனமுடைந்த பெண் தனது ஒரு வயது குழந்தையுடன் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஒசக்கோட்டை, டிச.21-

கள்ளத்தொடர்பு விவகாரம்

பெங்களூரு புறநகர் ஒசகோட்டை தாலுகா கல்குந்தே அக்ரஹாரா கிராமத்தை சேர்ந்தவர் ராகேஷ். இவருக்கும், ஸ்வேதா(வயது 24) என்ற பெண்ணுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒரு வயதில் கைக்குழந்தை உள்ளது. ராகேசிற்கு, வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்ப்பு இருந்துள்ளது. இதுகுறித்து அறிந்த ஸ்வேதா, தனது கணவரிடம் கேட்டுள்ளார்.

ஆனால் கள்ளக்காதலை கைவிட ராகேஷ் மறுத்துள்ளார். மேலும், அவரை தாக்கி கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தனது கணவரின் குடும்பத்தினரிடம் ஸ்வேதா கூறி அழுதுள்ளார். ஆனால் அவர்கள் அதற்கு செவி சாய்க்காமல் இருந்துள்ளனர். இதனால் ஸ்வேதா மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு மீண்டும் கணவருடன் அவருக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கூடுதல் வரதட்சணை வாங்கி வருமாறு கூறி, ஸ்வேதாவை அவர் அடித்து துன்புறுத்தி உள்ளார்.

ஏரியில் குதித்து...

இதனால் மனமுடைந்த ஸ்வேதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குழந்தையுடன் அந்த பகுதியில் உள்ள ஏரிக்கு சென்றுள்ளார். பின்னர், குழந்தையுடன் சேர்ந்து ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து ஏரியில் பெண் பிணம் மிதப்பதாக அனுகொண்டனஹள்ளி போலீசாருக்கு அந்த பகுதியினர் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஏரியில் பிணமாக கிடந்த பெண், குழந்தையின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் கள்ளத்தொடர்பை கணவர் கைவிட மறுத்ததுடன், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் மனமுடைந்த பெண், குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து ராகேசை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story