காங்கிரஸ் மேலிடத்தின் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன்


காங்கிரஸ் மேலிடத்தின் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன்
x

எல்லோரையும் விட கட்சி பெரியது என்பதால், காங்கிரஸ் மேலிடத்தின் முடிவுக்கு கட்டுப்படுவேன் என்று பரமேஸ்வர் கூறியுள்ளார்.

பெங்களூரு:-

கட்சி பெரியது

கர்நாடக காங்கிரஸ் முன்னாள் தலைவர் பரமேஸ்வர், தனக்கு துணை முதல்-மந்திரி பதவியை வழங்கியே தீர வேண்டும் என்று கூறி வருகிறார். ஆனால் காங்கிரஸ் மேலிடம், ஒரு துணை முதல்-மந்திரி பதவி மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளதாக திட்டவட்டமாக கூறியுள்ளது. அதுவும் டி.கே.சிவக்குமாருக்கு மட்டுமே அந்த துணை

முதல்-மந்திரி பதவி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பரமேஸ்வர் தனது அதிருப்தியை தெரிவித்தார். இந்த நிலையில் அவர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

எல்லோரையும் விட கட்சி பெரியது. கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன். முதலில் மக்களுக்கு நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தான் எங்களின் முன்னுரிமை. நாங்கள் அந்த திசையில் கவனம் செலுத்தியுள்ளோம். இந்த நேரத்தில் தனிப்பட்ட ஆசைகள், விருப்பங்களுக்கு இடமில்லை. நாங்கள் எதிர்காலத்தை பார்க்க வேண்டியுள்ளது.

வழங்க இயலாது

அடுத்த ஆண்டு (2024) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றுவோம். எல்லோருக்கும் ஆசைகள் உள்ளன. வரும் காலத்தில் அந்த ஆசைகள் படிப்படியாக நிறைவேறும். எல்லா தொகுதி மக்களுக்கும், தங்கள் தொகுதியை சேர்ந்த எம்.எல்.ஏ.வுக்கு மந்திரி பதவி கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் அனைவருக்கும் வாய்ப்புகள் வழங்க இயலாது. இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. புதிய முதல்-மந்திரி பேச்சுவார்த்தை மூலம் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். வாய்ப்புகளை வழங்குமாறு கேட்பது தவறல்ல. ஆனால் வாய்ப்பு கிடைக்காத போது, தியாகங்களை செய்ய தலைவர்கள் தயாராக வேண்டும். முதல்-மந்திரியும், துணை முதல்-மந்திரியும் அனைவரையும் அரவணைத்து செல்வார்கள்.

இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.


Next Story