அடுத்த மாதம் முதல் பிரசாரத்தை தொடங்குகிறேன்; முன்னாள் பிரதமர் தேவேகவுடா பேட்டி


அடுத்த மாதம் முதல் பிரசாரத்தை தொடங்குகிறேன்; முன்னாள் பிரதமர் தேவேகவுடா பேட்டி
x
தினத்தந்தி 2 Dec 2022 6:45 PM GMT (Updated: 2 Dec 2022 6:46 PM GMT)

கா்நாடக சட்டசபை தேர்தலையொட்டி அடுத்த மாதம் (ஜனவரி) முதல் பிரசாரத்தை தொடங்குகிறேன் என்று முன்னாள் பிரதமர் தேவேகவுடா தெரிவித்துள்ளார்.

மைசூரு:

தேவேகவுடா சாமி தரிசனம்

ஜனதாதளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவேகவுடா, நேற்று முன்தினம் மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடுவில் உள்ள நஞ்சுண்டேஸ்வர் கோவிலுக்கு வந்தார். தனது மனைவி சென்னம்மாவுடன் கோவிலுக்கு வந்த அவர், விசேஷ பூஜை நடத்தி சாமி தரிசனம் செய்தார். மேலும் கோவிலுக்கு துலாபாரமும் வழங்கினார்.

இதையடுத்து தேவேகவுடா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அடுத்த மாதம் பிரசாரம்

கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு (2023) சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி அடுத்த மாதம் (ஜனவரி) முதல் நான் பிரசாரத்தை தொடங்க உள்ளேன். நான் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஜனதாதளம்(எஸ்) கட்சியை ஆட்சி கட்டிலில் அமர்த்த தீவிர பிரசாரம் மேற்கொள்வேன். ஏற்கனவே குமாரசாமி, பஞ்சரத்ன யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இதற்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்துள்ளது.

இதனால் சட்டசபை தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) கட்சி தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும். ஜனதாதளம்(எஸ்) சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் அடிக்கடி மாறி கொண்டே இருக்கிறது. தற்போது தயார்படுத்தி உள்ள வேட்பாளர்கள் பட்டியல் இறுதியானது அல்ல.

மக்கள் முடிவு

தற்போது தயார் செய்துள்ள வேட்பாளர் பட்டியலை பரிசீலனை செய்து குமாரசாமியும், ரேவண்ணாவும் இறுதி செய்து இறுதி வேட்பாளர்கள் பட்டியலை விரைவில் வெளியிடுவார்கள். ஜனதாதளம்(எஸ்) வெற்றி பெற்றால் யார் முதல்-மந்திரி என்பது குறித்து கேட்கிறீர்கள். அடுத்த முதல்-மந்திரி யார் என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள்.

எனக்கு பல நாட்களாக மூட்டு வலி உள்ளது. டாக்டர்களிடம் காண்பித்தாலும் குணமாகவில்லை. இதனால், நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் பூஜை செய்து, மூட்டு வலி குணமாக வேண்டி உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story