தீர்வு காண வேண்டிய உடனடி பிரச்சினைகள்- பலதரப்பட்ட மக்களின் கருத்துகள்


தீர்வு காண வேண்டிய உடனடி பிரச்சினைகள்-  பலதரப்பட்ட மக்களின் கருத்துகள்
x

சாலை பள்ளம், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகளால் பெங்களூரு நகரவாசிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதுபற்றி பொதுமக்கள் தங்களது கருத்துளை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

சாலை பள்ளம், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகளால் பெங்களூரு நகரவாசிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதுபற்றி பொதுமக்கள் தங்களது கருத்துளை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

வார்டுகள் எண்ணிக்கை அதிகரிப்பு

பெங்களூரு நகரம் வேகமாக வளர்ந்து வருகிறது. பெங்களூருவில் 1 கோடிக்கும் மேல் மக்கள் வசித்து வருகிறார்கள். மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப பெங்களூரு நகரமும் தொடர்ந்து விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, பெங்களூரு மாநகராட்சியின் வார்டுகள் 198-ல் இருந்து 243 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது. வார்டுகள் உயர்த்தப்பட்டு இருந்தாலும், புதிதாக ஆரம்பிக்கப்பட்ட வார்டுகளுக்கு மாநகராட்சி சார்பில் அதிகாரிகள் நியமிக்கப்படாமல் உள்ளனர்.

மேலும் மாநகராட்சிக்கு தேர்தல் நடத்தப்பட்டு 2 ஆண்டுகளுக்கும் மேல் ஆகி விட்டது. இதன்காரணமாக வார்டுகளில் கவுன்சிலர்கள் இல்லாத காரணத்தால், வளர்ச்சி பணிகள் நடைபெறுவதில்லை. வார்டுகளை நிர்வகிக்கும் பொறுப்புகள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு இருந்தாலும், பொதுமக்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு அதிகாரிகளால் உடனடியாக தீர்வு காண முடியவில்லை. இதன்காரணமாக மாநகராட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

தீர்க்க முடியாத பிரச்சினைகள்

இது ஒருபுறம் இருக்க பெங்களூரு மாநகரின் வளர்ச்சிக்கு ஏற்ப மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளும் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் சில பிரச்சினைகள் தீர்க்க முடியாத வண்ணம் பெங்களூருவில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதன்படி சாலை பள்ளம், போக்குவரத்து நெரிசல், குப்பை பிரச்சினைகள், முக்கிய பகுதிகளில் பொது கழிவறை இல்லாத நிலை என்று மக்களின் அடிப்படை பிரச்சினைகளை சொல்லிக் கொண்டே செல்லலாம்.

பெங்களூருவில் சாதாரண மழை பெய்தால் கூட சாலைகளில் உள்ள தார் பெயர்ந்து பள்ளமாக மாறி விடுகிறது. பெங்களூருவில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலை பள்ளங்கள் இருந்தது. இந்த சாலை பள்ளங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் காயம் அடைந்ததுடன், உயிர் பலியாகும் சம்பவங்களும் அரங்கேறி வந்தது. இதனால் சுதாரித்து கொண்ட முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சாலை பள்ளங்களை உடனடியாக மூடும்படியும், இல்லையெனில் மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

பள்ளங்களால் விபத்து

இதையடுத்து, சாலை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்றது. ஆனாலும் இன்னும் ஏராளமான சாலைகளில் பள்ளங்கள் மூடப்படாமல் இருப்பதுடன், விபத்துகள் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் காயம் அடைந்து வருகிறார்கள். பல்வேறு காரணங்களை கூறி சாலை பள்ளங்களை மூடும் பணிகளையும் மாநகராட்சி தள்ளி வைத்து கொண்டே வருகிறது.

தொடர் மழை காரணமாகவும், தரமற்ற முறையில் போடப்படும் சாலைகளாலும் தார் பெயர்ந்து மீண்டும் பள்ளம் ஏற்படும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக சாலை பள்ளங்களை நிரந்தரமாக மூட முடியாத நிலை உள்ளது. சாலைகளில் பள்ளங்கள் இல்லாத நிலை எப்போது மாறும் என்று வாகன ஓட்டிகளும் எதிர்பார்த்து காத்திருக்க வேண்டி உள்ளது.

வாகன ஓட்டிகள் அவதி

இதுபோல், பெங்களூரு நகரில் தீராத பிரச்சினையாக போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது. நகரின் எந்த சாலைக்கு சென்றாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்படுவது தினமும் நடந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக நகரில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு என்று போலீசார் கூறி வருகின்றனர். பெங்களூருவில் 1 கோடிக்கும் மேல் வாகனங்கள் உள்ளன.

போக்குவரத்து நெரிசல் பிரச்சினையை தீர்க்க மேம்பாலங்கள் அமைத்தல், வெளிவட்ட சாலை, மெட்ரோ ரெயில் திட்டம், பெங்களூரு புறநகர் ரெயில் சேவை என பல திட்டங்களை அரசும், மாநகராட்சியும் கொண்டு வருகிறது. ஆனாலும் போக்குவரத்து நெரிசல் பிரச்சினை மட்டும் சரியாகவில்லை. போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஆம்புலன்சில் செல்லும் நோயாளிகள் கூட பரிதவிக்கும் நிலை பெங்களூருவில் அவ்வவ்போது நடக்க தான் செய்கிறது.

மாநகராட்சிக்கு தலைவலி


இந்த போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பது தான் வாகன ஓட்டிகளின் கோரிக்கையும், எதிர்பார்ப்புமாக உள்ளது. இதுபோன்று குப்பை பிரச்சினையும் மாநகராட்சிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. நகரில் கண்ட, கண்ட இடங்களில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டிவிட்டு செல்கிறார்கள். அந்த குப்பைகள் அள்ளப்படாமல் இருப்பதால், துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. நகரில் முக்கியமான பகுதிகளில் மாநகராட்சி சார்பில் குப்பை தொட்டிகள் வைப்பதில்லை.

இதுவும் மக்கள் பொது இடங்களில் குப்பை கொட்டுவதற்கு முக்கிய காரணமாகும். பொது இடங்களில் குப்பை கொட்டுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரித்து வருகிறது. ஆனாலும் அங்கு குப்பை தொட்டிகளை வைக்காமல், அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தாலும், இரவு நேரங்களில் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இது பெங்களூரு நகரின் அழகையே கெடுத்து வருகிறது. பெங்களூருவில் ஒரு நாாளைக்கு 4 ஆயிரம் டன் குப்பைகள் குவிகிறது. அவற்றை அள்ளி செல்வதே மாநகராட்சிக்கு பெரும் தலைவலியாக உள்ளது.

சுகாதார சீர்கேடு

பெங்களூரு நகரவாசிகள் சந்திக்கும் முக்கிய பிரச்சினைகளில் மற்றொன்று, பொது இடங்களில் கழிவறை இல்லாமல் இருப்பது தான். குறிப்பாக பஸ் நிறுத்தங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பொது கழிவறைகள் இருப்பதில்லை. மாநகராட்சி சார்பில் இ-கழிவறை வைக்கப்பட்டு இருந்தாலும், அது பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது. பொது கழிவறை இல்லாததால், பொது இடங்களில் சிறுநீர் கழித்து சுகாதாரத்திற்கு சீர்கேடு விளைவித்து வருகின்றனர்.

பெங்களூரு கொரகுண்டே பாளையாவில் பொது கழிவறை இல்லாததால் சப்-இன்ஸ்பெக்டர் சாந்தப்பாவின் தாய் மிகுந்த சிரமத்தை அனுபவித்தார். இதையடுத்து, பெங்களூருவில் பஸ் நிறுத்தங்கள், பொதுமக்கள் கூடும் பகுதிகளில் பொது கழிவறை கட்ட வேண்டும் என்று சமூக வலைத்தளம் மூலமாக சப்-இன்ஸ்பெக்டர் கோரிக்கையும் விடுத்திருந்தார்.

மக்களின் கோரிக்கை

இதுபோல், பெங்களூரு நகரில் மக்கள் சந்திக்கும் நிறைய பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருக்கிறது. பெங்களூருவை தகவல் தொழில் நுட்ப நகரம், பூங்கா நகரம் என்று பெருமைப்பட்டு கொண்டாலும், மக்கள் தொடர்ந்து சந்திக்கும் சாலை பள்ளங்கள், போக்குவரத்து நெரிசல், குப்பை பிரச்சினை உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகளை தீர்க்கப்படாமல் இருப்பது வேதனை அளிப்பதாக உள்ளது. இதனால் மாநகராட்சியும், அரசும் அடிப்படை பிரச்சினைகளை சரி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.

இதுபற்றி பொதுமக்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டுள்ளனர். அதுபற்றிய விபரம் வருமாறு:-

பணிகளை விரைந்து முடிக்க...

எலெக்ட்ரானிக் சிட்டியை சேர்ந்த கார் டிரைவர் கமல் கூறும் போது, "பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காண்பது சாத்தியமில்லை. இனிவரும் நாட்களில் இந்த பிரச்சினை அதிகமாகும் தவிர, குறையாது. பூங்கா நகரம், தகவல் தொழில்நுட்ப நகரம் என்பதுடன், டிராபிக் சிட்டி என்று சொல்லும் நிலை தற்போது உள்ளது. நான் பயணியை ஏற்றிக் கொண்டு 4 கிலோ மீட்டர் செல்ல 40 நிமிடங்கள் தேவைப்படுகிறது. அந்த அளவுக்கு போக்குவரத்து நெரிசல் பிரச்சினை இருக்கிறது.

பெங்களூருவில் ஐ.டி. ஊழியர்கள் இன்னும் வீட்டில் இருந்து வேலை செய்கிறார்கள். அவர்களும் அலுவலகத்திற்கு வந்தால், போக்குவரத்து நெரிசல் இன்னும் அதிகமாகும். போக்குவரத்து நெரிசலை சரி செய்ய சாலை விரிவாக்கம், வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதை விரைந்து முடிக்க வேண்டும். மெட்ரோ ரெயில் பாதை அமைத்தல் பணிகள், சீர்மிகு நகரம் உள்ளிட்ட பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுகிறது" என்றார்.

தேர்தல் நடத்த வேண்டும்

பி.டி.எம். லே-அவுட்டில் வசிக்கும் ஆம்ஆத்மியை சேர்ந்த தாமோதர் கூறுகையில், "பெங்களூருவில் சாலை பள்ளங்களை மூட மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுபற்றி தலைமை கமிஷனர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கு புகார் அளித்தாலும், எந்த பிரயோஜனமும் இல்லை. சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.20 ஆயிரம் கோடியை மாநகராட்சி செலவழிக்கிறது. அப்படி இருந்தும் சாலை பள்ளங்களை மூட முடியவில்லை.

சாலை பள்ளங்களால் மாதத்திற்கு 4 பேர் பலியாகி வருகின்றனர். மாநகராட்சிக்கு தேர்தல் நடைபெறவில்லை. கவுன்சிலர்கள் இருந்தால், மக்கள் தங்களது குறைகளை சொல்வார்கள். அதற்கு கவுன்சிலர்கள் முடிந்த வரை தீர்வு காண்பார்கள். வளர்ச்சி பணிகளும் நடைபெறும். எனவே மாநகராட்சி தேர்தலை நடத்துவது முக்கியமாகும்" என்றார்.

மக்கள் ஒத்துழைப்பு அவசியம்

சுப்பிரமணியநகரை சேர்ந்த வக்கீல் செல்வி கூறுகையில், "குப்பை பிரச்சினை பெங்களூருவில் இருக்கத்தான் செய்கிறது. ஒரு இடத்தில் குப்பை இருந்தால், அதுபற்றி பொதுமக்கள் மாநகராட்சிக்கு புகார் அளிக்கலாம். அனைவரிடமும் செல்போன் இருக்கிறது. சாலையில் கிடக்கும் குப்பைகள் குறித்து புகைப்படம் எடுத்து மாநகராட்சிக்கு அனுப்பினால், அதனை சரி செய்ய நடவடிக்கை எடுப்பார்கள். குப்பை பிரச்சினையை தீர்க்க மக்களின் ஒத்துழைப்பும் அவசியமாகும்.

போக்குவரத்து நெரிசல் பிரச்சினை ஏற்பட வாகனங்களின் எண்ணிக்கை ஒரு காரணமாக இருந்தாலும், எதற்கெடுத்தாலும் வாகனங்களை பயன்படுத்த கூடாது. அருகில் உள்ள கடைகளுக்கு நடந்து செல்லலாம். அப்படி யாரும் செய்வதில்லை. பக்கத்தில் உள்ள கடைக்கும் மோட்டார் சைக்கிள், கார்களில் மக்கள் செல்கிறார்கள். முன்பு போல் மக்கள் குறுகிய தூரத்திற்கு நடந்து சென்றால், போக்குவரத்து நெரிசல் ஏற்படாது, மக்களின் உடல்நலத்திற்கும் நல்லது" என்றார்.

அதிக கட்டணம் வசூல்

பாபுசாப் பாளையாவை சேர்ந்த ஆட்டோ டிரைவரான மணி கூறுகையில், "பெங்களூருவில் பொது இடங்களில் கழிவறை இல்லாமல் இருக்கிறது. அவ்வாறு கழிவறை இருந்தாலும், அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள். இதன் காரணமாக பொது இடங்களில் மக்கள் அசுத்தம் செய்கிறார்கள்.

எனவே குறிப்பிட்ட இடைவெளி மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பொது கழிவறை அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் பெங்களூரு தூய்மையாக இருக்கும், சுகாதார சீர் கேடு ஏற்படுவது தவிர்க்கப்படும்" என்றார்.


Next Story