டோலோ மாத்திரையை நோயாளிகளுக்கு பரிந்துரைக்க மருத்துவர்களுக்கு ரூ.1,000 கோடி: குற்றச்சாட்டை நிராகரித்த நிறுவனம்!


டோலோ மாத்திரையை நோயாளிகளுக்கு பரிந்துரைக்க மருத்துவர்களுக்கு ரூ.1,000 கோடி: குற்றச்சாட்டை நிராகரித்த நிறுவனம்!
x

டோலோ-650 மாத்திரையை நோயாளிகளுக்கு பரிந்துரைப்பதற்காக, மருத்துவர்களுக்கு ரூ.1,000 கோடி விநியோகித்தனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

புதுடெல்லி,

டோலோ-650 மாத்திரையை தயாரித்த நிறுவனம், இந்த மாத்திரையை நோயாளிகளுக்கு பரிந்துரைப்பதற்காக, மருத்துவர்களுக்கு ரூ.1,000 கோடி மதிப்பிலான இலவசங்களை விநியோகித்தனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

நேரடி வரிகளுக்கான மத்திய வாரியம் (சிபிடிடி) டோலோ-650 மாத்திரை தயாரிப்பாளர்கள் மீது குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில், டோலோ-650 மாத்திரையை பரிந்துரைக்க மருத்துவர்களுக்கு ரூ.1,000 கோடி மதிப்பிலான இலவசங்களை அந்த மாத்திரையை தயாரித்து வரும் நிறுவனம் வழங்கியதாக இந்திய மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் கூட்டமைப்பின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் சஞ்சய் பரிக் ஆஜரானார். நீதிபதிகள் டிஒய் சந்திரசூட் மற்றும் ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

டோலோ மாத்திரை நிறுவனம் மீதான குற்றச்சாட்டு தொடர்பான விஷயத்தை "ஒரு தீவிரமான பிரச்சினை" என்று கோர்ட்டு விவரித்தது. மேலும், 10 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறுகையில், "இது ஒரு "தீவிரமான பிரச்சினை", மேலும் கொரோனா சிகிச்சையின் போது தனக்கும் அதே மாத்திரை பரிந்துரைக்கப்பட்டது" என்றும் கூறினார்.

இந்த நிலையில், கொரோனா காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் வருவாய் ரூ.350 கோடியாக இருந்தது என்று நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் தொடர்புப்பிரிவு நிர்வாக துணைத் தலைவர் ஜெயராஜ் கோவிந்தராஜு கூறினார். பெங்களூரைச் சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனமான மைக்ரோ லேப்ஸ் லிமிடெட் "டோலோ-650 மாத்திரையை" தயாரித்து வருகிறது. இந்த குற்றச்சட்டுகளை மறுத்துள்ள அவர் கூறியதாவது,

"கொரோனா காலகட்டத்தின் போது 650மில்லிகிராம் மருந்தை பரிந்துரைப்பதற்காக, மருத்துவர்களுக்கு ரூ.1,000 கோடி மதிப்பிலான இலவசங்களை விநியோகித்தல் முற்றிலும் ஆதாரமற்றவை மற்றும் 100 சதவீதம் தவறானவை.

இது வெறும் டோலோ 650 மட்டுமல்ல, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் சேர்க்கைகள் போன்ற பிற கொரோனா நெறிமுறை மருந்துகளும் கூட அந்த சமயத்தில் மிகச் சிறப்பாக விற்பனை செய்யப்பட்டன.

இந்த அம்சங்களைப் பற்றி கேட்டபோது, டோலோ-650 மாத்திரையின் விநியோக விகிதத்தையும் குறைத்திருப்பதாக" கோவிந்தராஜு கூறினார்.


Next Story