பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும்; பிரதமர் மோடி மைதானத்தின் பெயர் மாற்றப்படும்: குஜராத்தில் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி


பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும்; பிரதமர் மோடி மைதானத்தின் பெயர் மாற்றப்படும்: குஜராத்தில் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி
x

குஜராத் மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் 1 மற்றும் 5-ந் தேதி இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

ஆமதாபாத்,

குஜராத் மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் 1 மற்றும் 5-ந் தேதி இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பா.ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை ராஜஸ்தான் முதல்-மந்திரி அஷோக் கெலாட் முன்னிலையில் வெளியிட்டது.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் ரூ.3 லட்சம் வரையிலான விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும், பழைய ஓய்வூதியத் திட்டம் மாநிலத்தில் அமல்படுத்தப்படும், குஜராத்தில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும், அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும், தனியாக வசிக்கும் பெண்கள், விதவைகள், வயதான பெண்கள் ஆகியோருக்கு மாதம்தோறும் ரூ.2,000 நிதி உதவி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும், வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம்தோறும் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும், வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களுக்கு ரூ.500 மானியம் வழங்கப்படும், கொரோனா கால நிவாரணமாக ரூ.4 லட்சம் வழங்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஆமதாபாத் நகரில் கட்டப்பட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தின் பெயர் சர்தார் படேல் மைதானம் என மாற்றப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story