கர்நாடகத்தில், 9 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள்
கர்நாடகத்தில் 9 மாவட்டங்களில் அரசு-தனியார் பங்களிப்பில் புதிய மருத்துவ கல்லூரிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
பெங்களூரு: கர்நாடகத்தில் 9 மாவட்டங்களில் அரசு-தனியார் பங்களிப்பில் புதிய மருத்துவ கல்லூரிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
துப்புரவு தொழிலாளர்கள்
கர்நாடக சுகாதாரத்துறை சார்பில் டாக்டர்கள் தின விழா பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:- டாக்டர்கள், நர்சுகள், துப்புரவு தொழிலாளர்கள் என அரசின் அனைத்து ஊழியர்களும் சரியான முறையில் நேரத்திற்கு வந்து பணியாற்றுகிறார்கள். போலீசார் 24 மணி நேரமும் பணியாற்றுகிறார்கள். தீவிர சிகிச்சை பிரிவில் பணியாற்றும் ஊழியர்கள் 24 மணி நேரமும் வேலை செய்கிறார்கள். அதனால் தான் அரசின் சேவைகள் மக்களுக்கு கிடைக்கின்றன. கொரோனா நெருக்கடி காலத்தில் மருத்துவ பணியாளர்கள் கடும் சவாலை எதிர்கொண்டு மனித உயிர்களை காப்பாற்றினர். கொரோனாவுக்கு எதிரான போரில் மருத்துவ பணியாளர்கள் வெற்றி கண்டுள்ளனர். சொந்த உயிரை பணயம் வைத்து அவர்கள் பணியாற்றினர். பணியில் இருந்தபோது பலர் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். இதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
தொலைநோக்கு திட்டம்
தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளது. தடுப்பூசி கண்டுபிடித்துள்ளோம். அதை பயன்படுத்தி நாம் தொடர்ந்து நமது தொழிலில் முன்னேறி செல்ல வேண்டும். தொழில்நுட்பங்கள் அதிகளவில் வந்துள்ளன. அவற்றை முழுவதுமாக பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் பொதுமக்களுக்கு நல்ல சுகாதார சேவைகளை வழங்க முடியும். சுகாதாரத்துறையில் ஒரு தொலைநோக்கு திட்டத்தை கொண்டு வந்துள்ளோம்.
இதன் மூலம் சுகாதாரத்துறையில் அனைத்து மாநிலங்களுக்கும் கர்நாடகம் முன்மாதிரியாக இருக்கும். இந்த தொலைநோக்கு திட்டத்தை செயல்படுத்துவோம். அடுத்த 5 ஆண்டுகளில் கர்நாடகம் சிறந்த மருத்துவ வசதிகளை வழங்கும் மாநிலமாக மாறும். நாம் சுகாதாரமான கர்நாடகத்தை உருவாக்க அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். மக்கள்தொகை பெருக்கம் புதிய சவாலை ஏற்படுத்துகிறது. அதனால் குறைந்த கட்டணத்தில் தரமான சிகிச்சை வழங்குவது என்பது பெரிய பிரச்சினையாக உள்ளது. அதனால் பிரதமர் மோடி ஆயுஸ்மான் காப்பீட்டு திட்டத்தை கொண்டு வந்துள்ளார்.
பாதுகாக்கப்பட்ட குடிநீர்
சுகாதாரமான சமுதாயத்தை உருவாக்க பாதுகாக்கப்பட்ட குடிநீர், மருத்துவ காப்பீட்டு திட்டம், தூய்மை பாரதம் போன்ற பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்தியுள்ளார். கர்நாடகத்தில் மருத்துவத்துறையில் புதிய சாதனை படைத்துள்ளோம். பல்வேறு மாவட்டங்களில் அரசு மருத்துவ கல்லூரிகளை தொடங்கியுள்ளோம். இன்னும் 9 மாவட்டங்களில் மட்டுமே அரசு மருத்துவ கல்லூரி இல்லை. அந்த மாவட்டங்களிலும் அரசு-தனியார் பங்களிப்பில் மருத்துவ கல்லூரிகளை தொடங்க முடிவு செய்துள்ளோம்.
நாங்கள் சுகாதாரத்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். ரத்த சுத்திகரிப்பு மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளோம். புற்றுநோயாளிகளுக்கு 'ஹீமோதெரபி' சிகிச்சை அளிக்க வசதியாக மேலும் 12 மையங்களில் அந்த வசதியை தொடங்கியுள்ளோம். 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை செய்கிறோம். அனைத்து மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளிலும் இதய நோய் ஸ்கேன் வசதியை தொடங்க முடிவு செய்துள்ளோம்.
நோயாளிகள் வருகிறார்கள்
மன அழுத்தம் என்பது பொதுவான பிரச்சினையாக மாறிவிட்டது. இதை தடுக்க வேண்டியது அவசியம். பெங்களூருவில் உள்ள நிமான்ஸ் ஆஸ்பத்திரி மனநல சுகாதார சிகிச்சை அளிக்கிறது. நிமான்சுக்கு கர்நாடகம் மட்டுமின்றி தென்இந்திய நோயாளிகள் வருகிறார்கள். அனைத்து மாவட்டங்களிலும் மனநல சுகாதார சிகிச்சை மையங்களை தொடங்க திட்டமிட்டுள்ளோம்.
மாநிலத்தில் புதிதாக 100 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை தொடங்குகிறோம். 100 ஆரம்ப சுகாதார நிலையங்களை தரம் உயர்த்துகிறோம். சுகாதாரத்துறையில் சவால்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதற்கேற்ப அரசு சுகாதார மருத்துவ வசதிகளை அதிகரித்து வருகிறது.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.