காஷ்மீரில் குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவாக 36 தலைவர்கள் பதவி விலகல்


காஷ்மீரில் குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவாக 36 தலைவர்கள் பதவி விலகல்
x

காஷ்மீரில் குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவாக இளைஞர் காங்கிரசார் உள்பட 36 தலைவர்கள் பதவி விலகி கட்சிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளனர்.



ஸ்ரீநகர்,



காங்கிரசின் மூத்த தலைவா்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத், கட்சியின் அடிப்படை உறுப்பினா் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக கடந்த ஆகஸ்டு இறுதியில் அறிவிப்பு வெளியிட்டார். இது தொடா்பாக கட்சி தலைவா் சோனியா காந்திக்கு அவா் எழுதிய கடிதத்தில், கட்சியின் கட்டமைப்பை ராகுல் காந்தி சீா்குலைத்துவிட்டதாக குற்றஞ்சாட்டினார்.

இதுபற்றி டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறும்போது:- காங்கிரசில் இருந்து வெளியேற மோடியை ஒரு காரணமாக கூறுவது சாக்குபோக்கு. காங்கிரஸ் தலைமை குறித்து ஜி23 கடிதம் எழுதப்பட்டதில் இருந்தே காங்கிரசாருக்கு என்னிடம் பிரச்சனை உள்ளது.

அவர்களுக்கு யாரும் கடிதம் எழுதுவதையோ கேள்விகளை எழுப்புவதையோ அவர்கள் எப்போதும் விரும்பவில்லை. இதுவரை பல காங்கிரஸ் கூட்டங்கள் நடந்தன. ஆனால், ஒரு முடிவு கூட எடுக்கப்படவில்லை. காங்கிரசிலிருந்து வெளியேற என்னை அவர்கள் கட்டாயப்படுத்தினார்கள். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சில என் நண்பர்களே என்னை பற்றி குற்றச்சாட்டு முன்வைக்கிறார்கள். காங்கிரசில் விரோதிகள் முன்னேறி கொண்டிருக்கிறார்கள் என வேதனையுடன் கூறினார்.

இந்நிலையில், அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், காங்கிரஸ் கட்சியின் இந்திய தேசிய மாணவர்கள் கூட்டமைப்பு, ஜம்முவில் பல்வேறு பல்கலை கழகங்களில் உள்ள இளைஞரணி தலைவர்களும் தங்களது பதவிகளில் இருந்து விலகி உள்ளனர்.

அவர்களில் மாநில துணை தலைவர் அனிருத் ரெய்னா மற்றும் மாநில பொது செயலாளர் மாணிக் சர்மா ஆகியோர் இந்திய தேசிய மாணவர்கள் கூட்டமைப்பின் அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்து விலகி விட்டனர்.

சமீப நாட்களாக குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அதிக அளவில் காஷ்மீர் பிரிவு காங்கிரஸ் கட்சியினர் பதவி விலகி கட்சிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளனர்.

கடந்த செவ்வாய் கிழமை, ஜம்மு மற்றும் காஷ்மீரின் முன்னாள் முதல்-மந்திரி தாரா சந்த் உள்பட 64 தலைவர்கள் பதவி விலகி இருந்தனர்.

இந்த பதவி விலகல் கடிதங்கள் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அதில், கட்சியின் அடிமட்ட தொண்டர்களின் பணியானது கட்சியில் உள்ளவர்களால் கவனம் கொள்ளப்படுவதில்லை. கட்சியில் தனிநபர் முகஸ்துதி மற்றும் ஒரு சார்பு நிலை ஆகியவற்றை பார்த்து சலித்து போய்விட்டோம். இதனாலேயே, 90 சதவீத தேர்தல்களில் நாம் தோல்வி அடைந்து உள்ளோம் என அவர்கள் தெரிவித்து உள்ளனர்.


Next Story