தேசிய கொடியை எரித்த வழக்கில் ஷாரிக் உள்பட 3 பேர் மீது 'உபா' சட்டம் பாய்ந்தது


தேசிய கொடியை எரித்த வழக்கில்  ஷாரிக் உள்பட 3 பேர் மீது உபா சட்டம் பாய்ந்தது
x

தேசிய கொடியை எரித்த வழக்கில் ஷாரிக் உள்பட 3 பேர் மீது ‘உபா’ சட்டம் பாய்ந்துள்ளது.

பெங்களூரு: தேசிய கொடியை எரித்த வழக்கில் ஷாரிக் உள்பட 3 பேர் மீது 'உபா' சட்டம் பாய்ந்துள்ளது.

மங்களூரு குண்டுவெடிப்பு

கர்நாடக மாநிலம் மங்களூரு நாகுரி பகுதியில் கடந்த 19-ந்தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இதில் ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது குண்டுவெடிப்பில் காயம் அடைந்த மற்றொரு நபர் சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி தாலுகா சொப்புகுட்டேயை சேர்ந்த ஷாரிக் (வயது 24) என்பது தெரியவந்தது. மேலும் அவர் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது.

இந்த நிலையில், சிவமொக்காவில் வீரசாவர்க்கர் பேனர் வைத்த விவகாரத்தில் துணி வியாபாரி பிரேம் சிங்கை கத்தியால் தாக்கிய வழக்கில் தேடப்பட்டு வந்தவர் என்றும் தெரியவந்தது. அதாவது, கடந்த ஆகஸ்டு மாதம் சுதந்திர தின பவள விழாவையொட்டி சிவமொக்கா அமீர் அகமது சர்க்கிளில் வீரசாவர்க்கர் பேனர் வைக்கப்பட்டிருந்தது. இதனை அகற்றும்போது அங்கு வன்முறை ஏற்பட்டது. அப்போது பிரேம் சிங்கை ஷாரிக் உள்பட 3 பேர் தாக்கி இருந்தனர். இதில் ஷாரிக்கின் நண்பர்களான மாஸ் முனீர், சையது யாசின் ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர். ஷாரிக் மட்டும் தலைமறைவாக இருந்து வந்தார்.

தேசிய கொடி எரிப்பு

இந்த நிலையில் ஷாரிக், மாஸ் முனீர், சையது யாசின் ஆகிய 3 பேரும் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததும், நாசவேலையை அரங்கேற்ற சதி திட்டம் தீட்டி வந்ததும் தெரியவந்தது. மேலும் அவர்கள் வெடிகுண்டுகளை தயாரித்து சிவமொக்காவில் துங்கா நதிக்கரையோரம் மற்றும் தமிழ்நாடு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் அதனை வெடிக்க செய்து ஒத்திகையும் பார்த்துள்ளனர்.

மேலும் துங்கா நதிக்கரையோரம் அவர்கள் 3 பேரும் தேசியக்கொடியை தீயிட்டு எரித்ததும் தெரியவந்துள்ளது. தற்போது கைதான மாஸ் முனீர், சையது யாசின் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

'உபா' சட்டம்

இந்த நிலையில் தேசிய கொடியை தீயிட்டு எரித்த வழக்கில் ஷாரிக், மாஸ் முனீர், சையது யாசின் ஆகிய 3 பேர் மீதும் 'உபா' (சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம்) சட்டம் பாய்ந்துள்ளது. இதனால் சிறையில் உள்ள மாஸ் முனீர், சையது யாசின் ஆகிய 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

ஷாரிக் குணமான உடன், இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்கவும் என்.ஐ.ஏ. திட்டமிட்டுள்ளனர்.


Next Story