கடந்த 5 ஆண்டுகளில் உடுப்பியில் சாலை விபத்துகளில் 1,155 பேர் சாவு


கடந்த 5 ஆண்டுகளில் உடுப்பியில் சாலை விபத்துகளில் 1,155 பேர் சாவு
x

கடந்த 5 ஆண்டுகளில் உடுப்பி மாவட்டத்தில் சாலை விபத்துகளில் 1,155 பேர் உயிரிழந்துள்ளனர். சாலைகளை சீரமைக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

மங்களூரு;

1,155 பேர் சாவு

கர்நாடக கடலோர மாவட்டமான உடுப்பியில் கடந்த சில ஆண்டுகளாக சாலை விபத்து அதிகரித்து வருகிறது. இதுகுறித்து நடத்திய ஆய்வில், உடுப்பி மாவட்டத்தில் கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து கடந்த 2021-ம் ஆண்டு வரை 15,799 சாலை விபத்துகள் நடந்துள்ளது. இதில், 1,155 பேர் உயிரிழந்துள்ளனர்.

4,068 பேர் படுகாயங்களும், 2,399 பேர் சிறிய காயங்களும் அடைந்துள்ளனர். ஆண்டுக்கு சராசரியாக 200 பேர் உயிரிழந்து வருகிறார்கள்.நடப்பாண்டில் கடந்த ஜூன் மாத இறுதி வரை மாவட்டத்தில் 699 சாலை விபத்துகள் நடந்துள்ளது. இதில் 128 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 483 பேர் படுகாயங்களும், 399 பேர் சிறிய காயங்களும் அடைந்துள்ளனர்.


மக்கள் கண்டனம்

உடுப்பியில் நடக்கும் விபத்துகளுக்கு மோசமான சாலைகள் தான் காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உடுப்பி நகர் உள்பட மாவட்டத்தில் பல சாலைகள் மோசமான நிலையில் சேதமடைந்துள்ளது. இதுகுறித்து அந்தப்பகுதி மக்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

இதனால் கண்டனம் தெரிவித்துள்ள மக்கள், மாவட்டத்தில் சேதமடைந்த சாலைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

கலெக்டர் உத்தரவு

இந்த நிலையில், சாலை பள்ளங்கள் குறித்து நேற்று உடுப்பி மாவட்ட கலெக்டர் குர்மா ராவ், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர், உடுப்பி மாவட்டத்தில் சேதமடைந்துள்ள சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த கூட்டம் முடிந்து வெளியே வந்த கலெக்டர் குர்மா ராவ் நிருபர்களிடம் கூறுகையில், விபத்து அதிகம் நடக்கும் இடங்கள் கண்காணிக்கப்பட்டு அங்கு விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சாலை பள்ளங்களை மூடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சேதமடைந்த சாலைகளை சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார்.


Next Story