சார் பதிவாளர் அலுவலகங்களில் நடந்த சோதனை விவகாரத்தில் இடைத்தரகர்கள், ஏஜென்ட்டுகள் மீதும் லோக் அயுக்தாவில் வழக்குப்பதிவு


சார் பதிவாளர் அலுவலகங்களில் நடந்த சோதனை விவகாரத்தில்  இடைத்தரகர்கள், ஏஜென்ட்டுகள் மீதும்   லோக் அயுக்தாவில் வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 7 Nov 2022 6:45 PM GMT (Updated: 7 Nov 2022 6:45 PM GMT)

சார் பதிவாளர் அலுவலகங்களில் நடந்த சோதனை விவகாரத்தில் இடைத்தரகர்கள் மற்றும் ஏஜென்ட்டுகள் மீதும் லோக் அயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூரு: சார் பதிவாளர் அலுவலகங்களில் நடந்த சோதனை விவகாரத்தில் இடைத்தரகர்கள் மற்றும் ஏஜென்ட்டுகள் மீதும் லோக் அயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அலுவலகங்களில் சோதனை

பெங்களூரு மற்றும் புறநகர் மாவட்டங்களில் சார் பதிவாளர் அலுவலகங்களில் அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாகவும், இடைத்தரகர்கள் தலையீடு அதிகமாக இருப்பதாகவும், ரியல்எஸ்டேட் அதிபர்களின் தலையீடு இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதையடுத்து, கடந்த வாரம் பெங்களூருவில் உள்ள 15 சார் பதிவாளர் அலுவலகங்கள், பெங்களூரு புறநகரில் 4 சார் பதிவாளர் அலுவலங்கள், ராமநகரில் உள்ள 2 அலுவலகங்கள் என 21 இடங்களில் லோக் அயுக்தா போலீசார் சோதனை நடத்தி இருந்தார்கள்.

இந்த சோதனையின் போது சார் பதிவாளர் அலுவலகங்களில் இருந்து கணக்கில் வராத பல லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. ரூ.15 லட்சத்திற்கும் மேல் சிக்கி இருப்பதாக லோக் அயுக்தா போலீசார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சார் பதிவாளர் அலுவலகங்களில் பணியாற்றும் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அலுவலகங்களில் பணம் சிக்கியது குறித்து விளக்கம் அளிக்க அதிகாரிகளுக்கு நோட்டீசு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இடைத்தரகர்கள் மீது வழக்கு

இதற்கிடையில், சார் பதிவாளர் அலுவலகங்களில் இருக்கும் ஆவணங்கள் ரியல்எஸ்டேட் அதிபர்களின் கைக்கு சென்றதாகவும், அங்கு கிடைத்த பணம் மற்றும் ஆவணங்களில் இடைத்தரகர்கள் மற்றும் ஏஜென்ட்டுகளுக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, 20-க்கும் மேற்பட்ட இடைத்தரகர்கள், ஏஜென்ட்டுகள் மீது லோக் அயுக்தா போலீசார் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திர பதிவுக்காக செல்லும் நபர்களிடம் ஆவணங்களை பெற்றுக் கொண்டு, பத்திர பதிவுக்காக இடைத்தரகர்கள் லஞ்சம் பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. அதுகுறித்தும் லோக் அயுக்தா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story