துமகூரு பல்கலைக்கழகத்தில் வீரசாவர்க்கர் பெயரில் இருக்கை
துமகூரு பல்கலைக்கழகத்தில் வீரசாவர்க்கர் பெயரில் இருக்கை அமைக்க சிண்டிகேட் கூட்டத்தில் முன்மொழியப்பட்டது.
பெங்களூரு: கர்நாடக மாநிலம் துமகூருவில், துமகூரு பல்லைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆராய்ச்சிகள், வரலாற்றுகளை ஆய்வு செய்யும் வகையில் 14 இருக்கைகள் உள்ளன. இந்த நிலையில் இந்த பல்கலைக்கழகத்தில் 15-வது இருக்கையாக அக்னி பன்னிகரய்யா இருக்கை அமைக்கப்படுவதாக நேற்று முன்தினம் கர்நாடக அரசு அறிவித்துள்ளது. தற்போது இப்பல்கலைக்கழகத்தில் வீரசாவர்க்கர் பெயரில் ஆய்வு இருக்கை அமைக்க சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிண்டிகேட் உறுப்பினர் டி.டி.வினய் கூறுகையில், துமகூரு பல்கலைக்கழகத்தில் 16-வது ஆய்வு இருக்கையாக வீரசாவர்க்கர் பெயரில் இருக்கை அமைக்க சிண்டிகேட் கூட்டத்தில் முன்மொழியப்பட்டது. அனைத்து சிண்டிகேட் உறுப்பினர்களும் ஒப்புதல் கொடுத்துள்ளனர். இதற்கு ரூ.1 லட்சம் வைப்புத்தொகையும் ஒதுக்கப்படுகிறது. மேலும் நன்கொடையாளர்களிடம் இருந்து ரூ.25 லட்சம் பங்களிப்பு நிதி பெற திட்டமிட்டுள்ளோம். இதற்கான விரிவான வரைவு அறிக்கை தயாரித்து அரசிடம் ஒப்புதல் பெற முடிவு செய்துள்ளோம் என்றார். துமகூரு பல்கலைக்கழகத்தில் தான் வீரசாவர்க்கர் பெயரில் ஆய்வு இருக்கை அமைக்க உள்ளது என்பது நாட்டிலேயே இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.