மாணவிகளை பலாத்காரம் செய்ததாக முருக மடத்தின் மடாதிபதி உள்பட 5 பேர் மீது 'போக்சோ' வழக்கு
மாணவிகளை பலாத்காரம் செய்ததாக முருக மடத்தின் மடாதிபதி உள்பட 5 பேர் மீது ‘போக்சோ’ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சித்ரதுர்கா: கடந்த 1½ ஆண்டுகளாக மாணவிகளை தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்ததாக முருக மடத்தின் மடாதிபதி உள்பட 5 பேர் மீது 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாலியல் பலாத்காரம்
கர்நாடகத்தில் உள்ள பிரபல மடங்களில் ஒன்று சித்ரதுர்காவில் இருக்கும் முருக மடம். இந்த மடத்தின் மடாதிபதியாக இருப்பவர் சிவமூா்த்தி முருகா சரணரு. இந்த மடம் சார்பில் தங்கும் விடுதியுடன் கூடிய பள்ளிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சித்ரதுர்கா முருக மடத்தில் செயல்பட்டு வந்த பள்ளியில் தங்கி படித்து வந்த 10-ம் வகுப்பு மாணவிகள் 2 பேரை மடாதிபதி சிவமூர்த்தி முருக சரணரு, 1½ ஆண்டுகளுக்கும் மேலாக பலாத்காரம் செய்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
போலீசில் புகார்
பாதிக்கப்பட்ட மாணவிகள் மைசூருவில் உள்ள சமூக சேவை அமைப்பில் இதுபற்றி தெரிவித்தனர். இதையடுத்து அந்த அமைப்பினர் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தை தொடர்புகொண்டு மாணவிகளுக்கு நேர்ந்த கொடுமை குறித்து கூறினர்.
அதன்பேரில் குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரி ஒருவர் இதுதொடர்பாக மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு மீது மைசூரு நஜர்பாத் போலீசில் புகார் அளித்தார்.
போக்சோ வழக்கு
இந்த புகாரின்பேரில் மைசூரு நஜர்பாத் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் மடாதிபதி சிவமூர்த்தி முருக சரணரு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அவருக்கு உடந்தையாக இருந்ததாக சித்ரதுர்காவில் உள்ள அக்கமாதேவி வஸ்தி நிலையத்தின் வார்டன் ரஷ்மி, பசவதித்யா, பரமசிவய்யா, வக்கீல் கங்காதரய்யா ஆகியோர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
காப்பகத்தில் மாணவிகள்
இந்த விவகாரத்தை தொடர்ந்து பாதிக்கப்பட்ட 2 மாணவிகளையும் போலீசார் மீட்டு, குழந்தைகள் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் இந்த பாலியல் வழக்கை மைசூரு நஜர்பாத் போலீசார், சித்ரதுர்கா போலீசுக்கு மாற்றி உள்ளனர். இதுதொடர்பாக சித்ரதுர்கா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பரபரப்பு
முருக மடத்தின் மடாதிபதி சிவமூர்த்தி முருக சரணரு மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தி உள்ளது.