வருமானவரி விலக்கு, கழிவுகள் பெறும் முறை ரத்து ஆகிறது


வருமானவரி விலக்கு, கழிவுகள் பெறும் முறை ரத்து ஆகிறது
x

கோப்புப்படம்

வருமானவரி விலக்குகள், கழிவுகள் இல்லாத வரி திட்டத்தை மக்களை மேலும் கவரும் வகையில் மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வரிவிலக்கு பெறும் முறை, நாளடைவில் ரத்து ஆகிறது.

புதுடெல்லி,

வருமானவரி கணக்கு தாக்கலில், சில சேமிப்புகள், மருத்துவ காப்பீடு, கல்வி கட்டணம் போன்றவற்றுக்கு வரிக்கழிவும், வரிவிலக்குகளும் அளிக்கப்படுகின்றன.

இதற்கிடையே, 2020-ம் ஆண்டு பிப்ரவரி 1-ந் தேதி தாக்கல் செய்யப்பட்ட 2020-2021 நிதிஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், வருமான வரி செலுத்துவதில் இருவிதமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

ஒன்று, வரிவிலக்கு, வரிக்கழிவுகளுடன் கூடிய பழைய திட்டம். மற்றொன்று, வரிவிலக்கு மற்றும் கழிவுகள் இல்லாமல், வரிவிகிதம் குறைக்கப்பட்ட திட்டம். இந்த இரண்டில் எந்த திட்டத்தையும் வரி செலுத்துவோர் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

மறுஆய்வு

வருமானவரி செலுத்தும் தனிநபர்களுக்கு நிவாரணம் அளிப்பதும், வருமானவரி சட்டத்தை எளிமைப்படுத்துவதுமே இதன் நோக்கம்.

இதுபோல், கார்ப்பரேட் வரி செலுத்துவோருக்கு கடந்த 2019-ம் ஆண்டு இருவிதமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

இந்தநிலையில், வரிவிலக்குகள், கழிவுகள் இல்லாத புதிய வருமானவரி திட்டத்தை மத்திய நிதி அமைச்சகம் விரைவில் மறுஆய்வு செய்ய உள்ளது. அந்த திட்டத்தை வரி செலுத்தும் தனிநபர்களை மேலும் கவரக்கூடியவகையில் சிறப்பாக மாற்றும் நோக்கத்தில் மறுஆய்வு செய்கிறது.

மாற விருப்பம்

புதிய வருமானவரி திட்டத்தின் செயல்பாடுகள் பற்றி கேட்டதற்கு மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:-

வீட்டு கடன், கல்விக்கடன் ஆகியவற்றை செலுத்தி முடித்தவர்களுக்கு வரிவிலக்கு பெற எதுவும் இருக்காது. அதனால் அவர்கள் புதிய வருமானவரி திட்டத்துக்கு மாற விரும்புகிறார்கள். வரிவிகிதத்தை இன்னும் குறைப்பதன் மூலம், இந்த திட்டம் மக்களை மேலும் கவரும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

நாளடைவில், வரிவிலக்கு இல்லாத புதிய வருமானவரி திட்டத்தை நிரந்தரமாக்குவதும், வரிவிலக்கு, கழிவுகள் கொண்ட பழைய திட்டத்தை ரத்து செய்வதும்தான் மத்திய அரசின் நோக்கம் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


Next Story