சிக்கமகளூருவில் காங்கிரஸ் பெண் பிரமுகரின் வீடு, அலுவலகங்களில் வருமான வரி சோதனை


சிக்கமகளூருவில் காங்கிரஸ் பெண் பிரமுகரின் வீடு, அலுவலகங்களில் வருமான வரி சோதனை
x
தினத்தந்தி 17 Nov 2022 6:45 PM GMT (Updated: 17 Nov 2022 6:46 PM GMT)

சிக்கமகளூருவில் உள்ள காங்கிரஸ் பெண் பிரமுகரின் வீடு, அலுவலகங்களில் நேற்று வருமான வரி சோதனை நடந்தது.

சிக்கமகளூரு:

வருமான வரி சோதனை

சிக்கமகளூரு டவுன் மார்க்கெட் ரோட்டில் வசித்து வருபவர் காயத்ரி சாந்தேகவுடா. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர், முன்னாள் எம்.எல்.சி. ஆவார். இந்த நிலையில் நேற்று காலை 6 மணிக்கு 10-க்கும் மேற்பட்ட கார்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அவரது வீட்டுக்கு வந்தனர். அவர்கள் காயத்ரி வீட்டில் அங்குலம் அங்குலமாக சோதனை செய்தனர். வீட்டில் இருந்த ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

மேலும் காயத்ரி மற்றும் அவரது கணவர் சாந்தேகவுடா ஆகியோரிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதேபோல், ஜலலிகிராசில் உள்ள அவரது அலுவலகம், ஹாசன் மாவட்டம் பேளூரில் உள்ள அவரது மருமகன் வீடு, பெங்களூரு நாகரபாவியில் உள்ள காயத்ரி வீடுகள் மற்றும் அலுவலகம் என மொத்தம் 13 இடங்களில் நேற்று வருமான வரி துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டனர்.

காங்கிரஸ் சார்பில் போட்டி

இந்த சோதனையில் சில முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக தெரிகிறது. காங்கிரஸ் பெண் பிரமுகர் வீட்டில் நடந்த வருமான வரி சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் நடந்த மேல்-சபை தேர்தலில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜனதாவை சேர்ந்த பிரானேசிடம் காயத்ரி தோல்வி அடைந்தார். இந்த நிலையில், அடுத்த ஆண்டு (2023) நடக்கும் கர்நாடக சட்டசபை தேர்தலில் காயத்ரி போட்டியிட முடிவு ெசய்திருந்தார்.

சிக்கமகளூருவில் காயத்ரியை நிறுத்த காங்கிரஸ் மேலிடமும் தீர்மானித்திருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் தற்போது அவரது வீட்டில் வருமான வரி சோதனை நடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

போராட்டம்

காயத்ரி சாந்தேகவுடா வீட்டில் நடந்த சோதனைக்கு பா.ஜனதா எம்.எல்.ஏ. சி.டி.ரவி தான் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் வருமான வரி சோதனையை கண்டித்தும், சி.டி.ரவி எம்.எல்.ஏ.வுக்கு எதிராகவும் நேற்று காயத்ரியின் ஆதரவாளர்கள் சிக்கமகளூருவில் போராட்டம் நடத்தினர்.

திருமண கோஷ்டி போல வந்த வருமான வரித்துறையினர் காங்கிரஸ் பெண் பிரமுகர் காயத்ரி சாந்தேகவுடாவின் வீடு, அலுவலகங்களில் நேற்று வருமான வரி சோதனை நடந்தது. இந்த சோதனை நடத்துவதற்காக 10 கார்களில் நேற்று அதிகாலை வருமான வரித்துறையினர் ரகசியமாக வந்தனர். அதாவது திருமண கோஷ்டியினர் போல வந்துள்ளனர். ஒரு காரின் முன் பகுதியில் மணமகன் மற்றும் மணமகளின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. திருமண கோஷ்டியினர் போல வந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருந்தனர்.


Next Story