கடற்பயணத்திற்கான 5 ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரிய வளம் கொண்டது இந்தியா: மத்திய அரசு
கடற்பயணத்திற்கான 5 ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரிய வளம் கொண்டது இந்தியா என மத்திய பாதுகாப்பு செயலாளர் இன்று கூறியுள்ளார்.
புதுடெல்லி,
இந்திய கடலோர காவல் படை சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய பாதுகாப்பு செயலாளர் அஜய் குமார் இன்று கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் இந்திய கடலோர காவல் படையின் இயக்குனர் ஜெனரல் வி.எஸ். பதானியா மற்றும் உயரதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் அஜய் குமார் பேசும்போது, தேசிய கடற்பயண தேடுதல் மற்றும் மீட்பு வாரியத்தின் பணியில் இந்திய கடலோர காவல் படை இணைந்து செயல்படுகிறது. இதன்படி, கடல்வழியே பயணிப்பவர்களின் பாதிப்புகளுக்கு உடனடியாக விரைந்து செயலாற்றுவது மட்டுமின்றி நட்பு நாடுகளுடன் திறமையுடன் ஒருங்கிணைந்தும் செயல்படுகிறது.
தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து இந்திய கடலோர காவல் படை அனைத்து பணிகளையும் ஆற்றி வருகிறது. இதுவரை கடலில் சிக்கி தவித்த 11 ஆயிரம் பேரின் உயிரை காப்பாற்றி உள்ளது.
இந்தியா, கடற்பயணத்திற்கான 5 ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரிய வளம் கொண்டது. இந்திய கடலோர பகுதியை ஒட்டிய வழியே, உலகின் 40% கண்டெய்னர்கள் மற்றும் டேங்கர்களின் போக்குவரத்து நடந்து வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.