புயல் வீசும் கடல் பயணத்தில் வலுவான நட்பு நாடாக இந்தியா உள்ளது: ஜெர்மனி வெளியுறவு மந்திரி பேச்சு


புயல் வீசும் கடல் பயணத்தில் வலுவான நட்பு நாடாக இந்தியா உள்ளது: ஜெர்மனி வெளியுறவு மந்திரி பேச்சு
x

புயல் மற்றும் பேரலை வீசும் கடல் பயணத்தில் வலுவான நட்பு நாடாக இந்தியா உள்ளது என ஜெர்மனி வெளியுறவு மந்திரி அன்னாலேனா பேயர்போக் பேசியுள்ளார்.



புதுடெல்லி,


ஜெர்மனி வெளியுறவு மந்திரி அன்னாலேனா பேயர்போக் இந்தியாவில் கடந்த 5 மற்றும் 6 ஆகிய 2 நாட்கள் அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணம் மேற்கொண்டார். டெல்லியில் தங்கிய பேயர்போக்குக்கு, மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் சார்பில் விருந்து அளித்து உபசரிக்கப்பட்டது.

இதன்பின்னர் இரு நாட்டு வெளியுறவு மந்திரிகளின் சந்திப்பில், நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு உறவுகள் பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. இருதரப்பு விவகாரங்கள், பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள், உக்ரைன் விவகாரம், இந்தோ-பசிபிக் பிராந்திய விவகாரம் மற்றும் ஆப்கானிஸ்தானின் வளர்ச்சி பணிகள் ஆகியவை தொடர்புடைய விரிவான விவகாரங்கள் பற்றிய ஆலோசனைகளில் அவர்கள் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து, டெல்லியில் இருவரும் கூட்டாக பத்திரிகையாளர் சந்திப்பிலும் கலந்து கொண்டனர். இந்நிலையில், ஜெர்மனி வெளியுறவு மந்திரி அன்னாலேனா பேயர்போக் டெல்லியில் நடந்த இந்திய முத்தரப்பு மாநாட்டில் பங்கேற்று அவர் பேசினார்.

இதன் ஒரு பகுதியாக அன்னாலேனா பேசும்போது, உலகம் தொடர்ந்து, கொரோனா பெருந்தொற்று மற்றும் உக்ரைன் போர் ஆகியவற்றால் நிச்சயமற்ற சூழலை எதிர்கொண்டுள்ள நிலையில், புயல் மற்றும் பேரலை வீசும் கடல் பயணத்தில் ஜெர்மனியின் வலுவான நட்பு நாடாக இந்தியா உள்ளது என பேசியுள்ளார்.

ஆசியாவின் துடிப்புள்ள இந்த பகுதியில், உலகின் மிக பெரும் ஜனநாயகம் மற்றும் ஒரு வளர்ந்து வரும் அரசியல் மற்றும் பொருளாதார ஆற்றல் கொண்ட நாடான இந்தியா, கடினம் வாய்ந்த கடல் பயணத்தில் தங்களுடன் இணைந்து பயணிக்கும் என தனது நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தினார்.

ஏனெனில், புயல், பேரலை வீசும் சூழலான கடலில் பயணிக்க செல்லும்போது, உங்களது நண்பர்களை நீங்கள் நம்பியே ஆக வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.


Next Story