சீனாவில் பரவி வரும் புதிய வகை கொரோனா.. இந்தியாவுக்குள்ளும் நுழைந்தது..!! - 3 பேருக்கு பாதிப்பு
சீனாவில் பரவி வரும் புதிய வகை கொரோனா இந்தியாவுக்குள்ளும் நுழைந்தது. இதுவரை 3 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் திடீர் எழுச்சி பெற்று பரவி வருகிறது. இதற்கு காரணம், ஒமைக்ரானின் துணை வைரசான பிஎப்.7 துணை வைரஸ்கள்தான். இந்த வைரஸ் பிஏ.5.2.1.7 வைரஸ் போன்றுதான் என சொல்லப்படுகிறது. இந்த வைரஸ் அதிவேகமாக பரவுகிற தன்மையைக் கொண்டுள்ளது.
இந்த வைரஸ், சீனாவில் மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் ஆகிய நாடுகளிலும் பரவி விட்டது.
இந்த பிஎப்.7 வைரஸ், இந்தியாவிலும் நுழைந்துவிட்டது. குஜராத்தில் கடந்த அக்டோபர் மாதம் 2 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை குஜராத் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் கண்டறிந்துள்ளது. ஒடிசாவிலும் அந்த வைரஸ் ஒருவருக்கு பாதித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 3 பேரை இந்த வைரஸ் பாதித்துள்ளதாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த வைரஸ் குறுகிய அடைகாக்கும் காலத்தைக் கொண்டது, தடுப்பூசி போட்டவர்களுக்கும் தொற்றை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.