'சினூக்' ஹெலிகாப்டர்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படும் - விமானப்படை தகவல்
‘சினூக்’ ஹெலிகாப்டர்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்று விமானப்படை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
இந்திய விமானப்படைக்கு சினூக் ஹெலிகாப்டர்கள் அமெரிக்காவிடம் இருந்து வாங்கப்பட்டு உள்ளன. பன்னோக்கு ரக ஹெலிகாப்டர்களான இவற்றின் மூலம் படைகள், தளவாடங்கள், வெடிபொருட்கள், எரிபொருள் போன்றவற்றை விரைவாக கொண்டு செல்ல முடியும்.
அமெரிக்காவிடம் இருந்து வாங்கப்பட்ட 15 ஹெலிகாப்டர்களும் விமானப்படையில் இணைக்கப்பட்டு உள்ளன.
அமெரிக்கா சுமார் 400 சினூக் ஹெலிகாப்டர்களை இயக்கி வரும் நிலையில், அவற்றில் தற்போது அடிக்கடி கோளாறுகள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக எரிபொருள் கசிவு காரணமாக தீ விபத்துகள் அரங்கேறி வருகின்றன.
இதனால் தங்களிடம் இருக்கும் ஒட்டுமொத்த ஹெலிகாப்டர்களையும் திரும்பப்பெற அமெரிக்கா முடிவு செய்து உள்ளது. இதனால் இந்தியா வாங்கியிருக்கும் சினூக் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இந்த நிலையில், இந்திய விமானப்படையில் உள்ள சினூக் ஹெலிகாப்டர்கள் வழக்கம்போல தொடர்ந்து இயக்கப்படும் என விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. இந்தியாவிடம் உள்ள ஹெலிகாப்டர்களில் மேற்படி பாதிப்பு எதுவும் இல்லை என போயிங் இந்தியா நிறுவனம் விமானப்படையிடம் கூறியிருப்பதாக தெரிகிறது.
எனினும் இந்த விவகாரத்தில் விமானப்படையோ, போயிங் இந்தியா நிறுவனமோ எந்த கருத்தும் வெளியிடவில்லை