இந்திய விமான போக்குவரத்து துறை முற்றிலும் பாதுகாப்பானது - மத்திய அரசு உறுதி
இந்திய விமான போக்குவரத்து துறை முற்றிலும் பாதுகாப்பானது என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளது.
புதுடெல்லி,
இந்திய விமானங்கள் கடந்த சில நாட்களாக தொழில்நுட்ப கோளாறுகளை எதிர்கொண்டு வருகின்றன. தொடர்ந்து இதுபோன்ற பிரச்சினைகளை சந்தித்து வரும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் 50 சதவீத விமான இயக்கம் என்ற கட்டுப்பாட்டையும் விதித்து உள்ளது. மக்களவையில் கடந்த 28-ந்தேதி கேள்வி ஒன்றுக்கு பதிலளித்திருந்த சிவில் விமான போக்குவரத்து மந்திரி, இந்தியாவில் கடந்த ஓராண்டில் மட்டும் விமானங்களில் 478 தொழில்நுட்ப பிரச்சினை சம்பவங்கள் கண்டறியப்பட்டு உள்ளதாக கூறிருந்தார்.
இந்திய விமானங்களின் இத்தகைய பிரச்சினைகள் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இது வழக்கமான ஒன்றுதான் என விமான போக்குவரத்து இயக்குனரகம் (டி.ஜி.சி.ஏ.) விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து இயக்குனரக தலைவர் அருண்குமார் கூறுகையில், 'நாட்டின் சிவில் விமான போக்குவரத்து துறை முற்றிலும் பாதுகாப்பாக உள்ளது. சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பு வகுத்துள்ள நெறிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படுகின்றன' என்று கூறினார். கடந்த 16 நாட்களில் இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டு விமானங்களில் கூட 15 முைற மேற்படி பிரச்சினைகள் கண்டறியப்பட்டதாக கூறிய அருண் குமார், அவை சரியான முறையில் கையாளப்பட்டு சரி செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.