இந்தியாவின் முதல் மெய்நிகர் பள்ளி டெல்லி அரசுக்கு முன்னோடியாக மத்திய அரசால் தொடங்கப்பட்டது! பள்ளிக்கல்வி நிறுவனம் தகவல்


இந்தியாவின் முதல் மெய்நிகர் பள்ளி டெல்லி அரசுக்கு முன்னோடியாக மத்திய அரசால் தொடங்கப்பட்டது! பள்ளிக்கல்வி நிறுவனம் தகவல்
x
தினத்தந்தி 1 Sept 2022 12:30 PM IST (Updated: 1 Sept 2022 12:34 PM IST)
t-max-icont-min-icon

தேசிய திறந்தநிலைப் பள்ளி, ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பாக நவம்பர் 1989இல் நிறுவப்பட்டது.

புதுடெல்லி,

இந்தியாவின் முதல் மெய் நிகர் பள்ளி டெல்லியில் நேற்று தொடங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. டெல்லி முதல்-மந்திரி அர்விந்த் கெஜ்ரிவால் இந்த பள்ளியை தொடங்கி வைத்தார்.

கொரோனா காலத்திற்கு பிறகு மெய்நிகர் பள்ளிகள் பிரபலமடைய தொடங்கியுள்ளன. இந்த திட்டத்தின் மூலம் பள்ளிக்கு வராமலேயே மாணவர்கள் பாடங்களை படிக்க முடியும்.

தொலைதூரத்திலிருந்து பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு ஏதுவாக மெய்நிகர் கற்றல் திட்டத்தை டெல்லி அரசு அறிமுகம் செய்துள்ளது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் செயல் திறனை அறிந்து கொள்ள ஆசிரியர்களை சந்திப்பார்கள்.

இது குறித்துப் பேசிய டெல்லி முதல்-மந்திரி அர்விந்த் கெஜ்ரிவால், "இந்தியாவின் முதல் மெய்நிகர் பள்ளியை தொடங்கியுள்ளோம். டெல்லி மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும், 'டெல்லி மாதிரி மெய்நிகர் பள்ளியில்' இன்று முதல் 9ம் வகுப்பிற்கான சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது.

நாட்டின் அனைத்து பகுதியிலிருந்தும் மாணவர்கள் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். மெய்நிகர் பள்ளியில் மாணவர்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை கவனிக்க முடியும். மேலும் அதைப் பதிவு செய்து கொள்ளவும் முடியும்.

மாணவர்களுக்கு புத்தகங்களும் வழங்கப்படும். நீட் போன்ற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவதற்கும் மாணவர்களுக்கு வழிகாட்டப்படும்" எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில், இந்தியாவின் முதல் மெய்நிகர் பள்ளி மத்திய அரசால் தொடங்கப்பட்டது என்றும், டெல்லி அரசால் அல்ல என தேசிய திறந்தநிலை பள்ளிக்கல்வி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக, தேசிய திறந்தநிலை பள்ளிக்கல்வி நிறுவனம்(என் ஐ ஓ எஸ்) வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

இந்தியாவின் முதல் மெய்நிகர் பள்ளி கடந்த ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய கல்வித்துறை மந்திரியால் தொடங்கப்பட்டது.

அதன்படி தற்போது, 7,000க்கும் மேற்பட்ட கல்வி மையங்கள் 'என் ஐ ஓ எஸ்' உடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்கள் அர்ப்பணிப்புடன் கல்வியை வழங்குகின்றன.

என் ஐ ஓ எஸ்-இன் மெய்நிகர் திறந்தநிலை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, 1,500க்கும் மேற்பட்ட மையங்கள் திறன் அடிப்படையிலான தொழிற்கல்வி படிப்புகளையும் வழங்குகின்றன. இந்த மையங்களால் நேரடி வகுப்புகள் நடத்தப்படும்.

மெய்நிகர் திறந்தநிலைப் பள்ளியின் கீழ் 2021ஆம் கல்வியாண்டில், 2.18 லட்சம் வீட்டுப் பாடங்கள் அல்லது பணிகள் மாணவர்களால் பதிவேற்றப்பட்டன என்று தேசிய திறந்தநிலை பள்ளிக்கல்வி நிறுவனத்தின் அறிக்கை உறுதிப்படுத்துகிறது.

தேசிய திறந்தநிலைப் பள்ளி என அறியப்பட்ட தேசிய திறந்தநிலை பள்ளிக்கல்வி நிறுவனம் , ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பாக நவம்பர் 1989இல் நிறுவப்பட்டது. 1986ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கையின் கீழ் மத்திய கல்வி அமைச்சகத்தால் தேசிய திறந்தநிலைப் பள்ளி நிறுவப்பட்டது.


Next Story