'ஜி-20' அமைப்புக்கு இந்தியா தலைமை ஏற்பது அனைத்து மக்களுக்கும் பெருமிதம் - பிரதமர் மோடி நெகிழ்ச்சி
‘ஜி-20’ அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்குவது அனைத்து மக்களுக்கும் பெருமிதம் என்று பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
புதுடெல்லி,
'ஜி-20' என்னும் அமைப்பில் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென்கொரியா, மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 19 நாடுகளும், ஐரோப்பிய யூனியனும் இடம் பெற்றுள்ளன.
இந்த அமைப்பின் நாடுகள் மொத்தமாய் உலகின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் 85 சதவீத பங்கு வகிக்கின்றன. உலக வர்த்தகத்தில் 75 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன. உலக மக்கள் தொகையில் மூன்றில் இரு பங்கை கொண்டிருக்கின்றன. இந்த அமைப்புக்கு அடுத்த மாதம் 1-ந் தேதி இந்தியா தலைமை ஏற்க இருக்கிறது. இந்தோனேசியாவிடம் இருந்து இந்த தலைமை பொறுப்பு இந்தியாவுக்கு வருகிறது.
இதையொட்டி காணொலிக்காட்சி வழியாக நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, 'ஜி-20' அமைப்பின் சின்னம், கருப்பொருள், இணையதளம் ஆகியவற்றை நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-
நமது நாடு சுதந்திரத்தின் 75-வது ஆண்டை கொண்டாடியுள்ள தருணத்தில் 'ஜி-20' அமைப்புக்கு தலைமை ஏற்பது பெருமைக்குரியது. இது நமக்கு மிகப்பெரிய வாய்ப்பு ஆகும். சுதந்திரத்துக்கு பின்னர் இந்தியாவை முன்னோக்கி அழைத்துச்செல்வதில் அவர்களுக்கே உரித்தான விதத்தில் எல்லா அரசுகளும், மக்களும் பங்களிப்பு செய்துள்ளனர்.
ஜனநாயகம், ஒரு கலாசாரமாக மாறுகிறபோது, மோதல் நோக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்து விட முடியும் என்று உலகுக்கு இந்தியா காட்டும்.
முன்னேற்றமும், சுற்றுச்சூழலும் ஒன்றிணைந்து நடைபோட முடியும்.
'அனைத்து மக்களுக்கும் பெருமிதம்'
'ஜி-20'அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்குவது, நாட்டின் அனைத்து மக்களுக்கும் பெருமிதம் அளிப்பதாகும். இது அனைத்து இந்தியர்களுக்கும் மாபெரும் மகிமையை கொண்டு வரும்.
இந்த அமைப்பின் சின்னம், கருப்பொருள், இந்திய தலைமையையொட்டிய இணையதளம் ஆகியவறை நாட்டின் செய்தியையும், அதிக முன்னுரிமைகளையும் பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார்.
'ஜி-20' அமைப்பின் உச்சி மாநாடு வரும் 15, 16 தேதிகளில் இந்தோனேசியாவில் பாலியில் நடக்கிறது. இதில் உலகத்தலைவர்களுடன் பிரதமர் மோடியும் கலந்துகொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.