இந்திய 'ஸ்டார்ட் அப் வளர்ச்சி'க்கு இளைஞர்களின் சிறந்த அறிவாற்றலே காரணம் - மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்
இந்திய ‘ஸ்டார்ட் அப் வளர்ச்சி’க்கு இளைஞர்களின் சிறந்த அறிவாற்றலே காரணம் என்று மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள மணிப்பால் உயர் கல்வி அகாடமியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
விழாவில் பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் பேசியதாவது:-
இந்தியாவின் இளைஞர் சக்தியை உலகம் அங்கீகரித்துள்ளது. கூகுள், மைக்ரோசாஃப்ட், அடோப், ஐபிஎம் போன்ற முன்னணி நிறுவனங்கள் இந்தியர்களுக்கு மிக நல்ல வாய்ப்புகளை வழங்கி பணியமர்த்தி உள்ளன. பிரதமர் மோடியின் கனவான வலுவான மற்றும் தற்சார்புள்ள இந்தியாவுக்கு புதிய தொழில்நுட்பங்களை இளைஞர்கள் கண்டுபிடித்து உருவாக்க வேண்டும்.
இந்தியாவின் ஸ்டார்ட்அப் சூழலியல் வளர்ச்சி அடைந்துள்ளது. இளைஞர்களின் சிறந்த அறிவாற்றலாலேயே இது சாத்தியமாகி உள்ளது. 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு 400 முதல் 500 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இருந்தன, தற்போது அதன் எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அவற்றில் 100-க்கும் மேற்பட்டவை உலக அளவில் அதிக முதலீடு தொழில்களாக மாறியுள்ளன.
புத்தகங்களிலிருந்து அறிவை பெற்றால் போதும் என்று மட்டும் நினைக்க கூடாது. அறிவாற்றலை பயன்படுத்துவதன் மூலம் மட்டுமே நாட்டை புதிய உச்சங்களுக்கு எடுத்து செல்ல முடியும். அறிவியல், பொருளாதாரம், நிர்வாகம் என பல துறைகளில் இந்தியா முன்னோடியாக திகழ்ந்துள்ளது. அந்நிய படையெடுப்புகளால் அவை மறைந்தன.
கடந்த காலங்களை தெரிந்து கொண்டு நமது வளம் மிக்க கலாச்சார பாரம்பரியங்களிலிருந்து மாணவர்கள் பலவற்றை கற்று கொள்ள வேண்டும். நமது பொருளாதார முன்னேற்றம் உள்ளிட்ட அனைத்துக்காகவும் நமது கடந்த கால பெருமையை நாம் மீட்டெடுக்க வேண்டும்.
பாரம்பரிய மற்றும் நவீன அறிவாற்றலை வழங்கி இளையதலைமுறையை சிறந்த குடிமக்களாக மாற்றும் வகையில் புதிய தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளுக்கு உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.