அரசியல் தலைவர்களுடன் தொடர்பு குறித்து சிலுமே நிறுவன நிர்வாகிகளிடம் விசாரணை


அரசியல் தலைவர்களுடன் தொடர்பு குறித்து சிலுமே நிறுவன நிர்வாகிகளிடம் விசாரணை
x

அரசியல் தலைவர்களுடன் சிலுமே நிறுவன நிர்வாகிகளுக்கு இருக்கும் தொடர்பு குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. மேலும் செல்போன், மடிக்கணினி தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு: அரசியல் தலைவர்களுடன் சிலுமே நிறுவன நிர்வாகிகளுக்கு இருக்கும் தொடர்பு குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. மேலும் செல்போன், மடிக்கணினி தடயவியல் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

6 பேரிடம் தீவிர விசாரணை

பெங்களூருவில் வாக்காளர்களின் தகவல்களை சிலுமே நிறுவனம் திருடி பா.ஜனதா கட்சியினருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மந்திரி அஸ்வத் நாராயண் மீது காங்கிரஸ் தலைவர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு கூறி இருந்தார்கள். வாக்காளர்களின் தகவல்களை திருடிய விவகாரத்தில் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அல்சூர்கேட் மற்றும் காடுகோடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து சிலுமே நிறுவனத்தின் தலைவர் ரவிக்குமார், நிர்வாக இயக்குனர் கெம்பேகவுடா, நிர்வாக அதிகாரி லோகேஷ் உள்பட 6 பேரை அல்சூர்கேட் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த நிலையில், கைதான 6 பேரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

மகாதேவபுரா தொகுதியில்...

அதாவது வாக்காளர்களின் தகவல்களை திருடிய விவகாரத்தில் மகாதேவபுரா சட்டசபை தொகுதியில் தான் அதிகஅளவு தகவல்கள் திருடப்பட்டு இருப்பதாகவும், அதுகுறித்து கைதான 6 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மத்திய மண்டல துணை போலீஸ் கமிஷனர் சீனிவாஸ் கவுடா தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் சிலுமே நிறுவனத்திற்கு வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஆதார் அடையாள அட்டையை இணைக்கவும் மட்டுமே மாநகராட்சி அனுமதி வழங்கி இருந்தது.

ஆனால் அந்த நிறுவனம் வாக்காளர்களின் தகவல்களை திருடிய அரசியல் கட்சிகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, சிலுமே நிறுவனத்தின் தலைவர் ரவிக்குமாரிடம், அரசியல் தலைவர்களுடன் உள்ள தொடர்பு குறித்து போலீசார் விசாரித்தனர். ஆனால் அவர் போலீசாரிடம் சரியான தகவல்களை தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

அரசியல் தலைவர்களுடன் தொடர்பு

அதே நேரத்தில் அவர் எந்தெந்த அரசியல் தலைவர்களுடன் எல்லாம் பேசி உள்ளார்? என்பது குறித்து விசாரிக்க முடிவு செய்தார்கள். தனது செல்போன் தொலைந்து விட்டதாக போலீசாரிடம் ரவிக்குமார் கூறியுள்ளார். இதனால் அவர் எந்தெந்த அரசியல் தலைவர்களுடன் தொடர்பில் இருந்தார்? என்ற தகவல்களை திரட்டுவதில் போலீசாருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் கடைசியாக ரவிக்குமார் செல்போனை எப்போது பயன்படுத்தினார்? எந்த லோகேஷன் எங்கு காட்டுகிறது என்பதை அறியும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த வழக்கில் அவரது செல்போன் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதால், அதனை கைப்பற்ற போலீசார் தீவிரம் காடடி வருகிறார்கள்.

தடயவியல் ஆய்வுக்கு மடிக்கணினி

அதே நேரத்தில் வாக்காளர்களின் தகவல்களை திருடிய விவகாரத்தில் சிலுமே நிறுவனத்தில் சிக்கிய மடிக்கணினி, கம்ப்யூட்டர், கைதான மற்ற 5 நபர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை தடயவியல் ஆய்வுக்காக போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையில், நிர்வாக அதிகாரியான லோகேஷ், வாக்காளர்களின் தகவல்களை திருடுவதற்காக வாக்குச்சாவடி மட்டத்திலான தேர்தல் அதிகாரிகள் என பொதுமக்களிடம் கூறிக் கொள்வதற்காக போலியான அடையாள அட்டைகளை (பி.எல்.ஓ) தயாரித்திருந்ததும் தெரியவந்துள்ளது.


Next Story