ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவுக்கு எதிராகரோகிணி சிந்தூரி வழக்கு


ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவுக்கு எதிராகரோகிணி சிந்தூரி வழக்கு
x
தினத்தந்தி 23 Feb 2023 6:45 AM GMT (Updated: 23 Feb 2023 6:46 AM GMT)

அவதூறாக பேசுவதற்கு தடை விதிக்க கோரி ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவுக்கு எதிராக ரோகிணி சிந்தூரி தொடர்ந்த வழக்கில் பெங்களூரு கோர்ட்டு இன்று (வியாழக்கிழமை) இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உள்ளது.

பெங்களூரு,

பெண் அதிகாரிகள் மோதல்

கர்நாடகத்தை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா, ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரி இடையே மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து இருவரையும் அதிரடியாக இடமாற்றம் செய்து கர்நாடக அரசு காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளது.மேலும் கர்நாடக அரசு ஊடகங்களுக்கு பேட்டியளிக்க கூடாது என்று ரோகிணி சிந்தூரி, ரூபா ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளது.ஆனால் அதையும் மீறி ரூபா, ரோகிணி சிந்தூரிக்கு எதிராக தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் கருத்துகளை பரப்பி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூபாவுக்கு எதிராக வழக்கு

இதற்கிடையே தனக்கு எதிராக அவதூறாக பேசுவதற்கு ரூபாவுக்கு தடை விதிக்குமாறு கோரி ரோகிணி சிந்தூரி பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், தனது தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் செல்போன் எண்ணை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளதாகவும், இதனால் தனது மானம்-மரியாதைக்கு பங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அதனால் தன்னை குறித்து அவதூறாக பேசவோ அல்லது தனது தனிப்பட்ட புகைப்படங்களை வெளியிடவோ ரூபாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

இன்று இடைக்கால உத்தரவு

இந்த வழக்கில் ரோகிணி சிந்தூரி தரப்பு வக்கீல்கள் வாதிட்டனர். அதில், தனிப்பட்ட விஷயங்கள் குறித்து பொது வெளியில் பேசக்கூடாது என்று அரசு உத்தரவிட்ட பிறகும், ரூபா தொடர்ந்து ரோகிணி சிந்தூரிக்கு எதிராக அவதூறான கருத்துகளை பரப்பி வருவதாகவும், அதனால் அவருக்கு எதிராக அவதூறாக பேசுவதற்கு ரூபாவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வக்கீல்கள் வாதிட்டனர்.இந்த வழக்கில் இன்று (வியாழக்கிழமை) இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



Next Story