கர்நாடகத்தில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த 2 பேர் கைது


கர்நாடகத்தில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த 2 பேர் கைது
x

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக கர்நாடகத்தில் 2 பேரை நேற்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.

பெங்களூரு:

என்.ஐ.ஏ. அமைப்பு

இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்க தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதன்படி அந்த அமைப்பினர் நாடு முழுவதும் சோதனை நடத்தி, பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்களையும், பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆள் சேர்ப்பவர்களையும், பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பவர்களை கண்டறிந்து அவர்களை கைது செய்து வருகிறார்கள்.

நாட்டில் பல்வேறு பகுதிகளில் மக்களுடன் மக்களாக இருக்கும் பயங்கரவாத 'சிலீப்பர் செல்'கள் பற்றி உளவுத்துறை மூலம் தகவல்களை பெற்று அவர்களின் நடவடிக்கைகளை என்.ஐ.ஏ. அமைப்பனர் ரகசியமாக கண்காணித்து தக்க சமயத்தில் கைது செய்து வருகிறார்கள்.

அல்கொய்தா

இந்த நிலையில் கடந்த மாதம் (ஜூன்) பெங்களூரு ஸ்ரீராமபுரத்தில் உள்ள மசூதியில் பதுங்கி வசித்து வந்த காஷ்மீரை சேர்ந்த பயங்கரவாதி தாலீப் உசேன் என்பவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்து காஷ்மீருக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் கூட பெங்களூரு ஜெயநகரில் வசித்து வந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த பயங்கரவாதியான அக்தர் உசேன் லஸ்கர் என்பவரும் கைது செய்யப்பட்டு இருந்தார். இவர் அல்கொய்தா அமைப்புடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.

மேலும் அவர் கொடுத்த தகவலின்பேரில் தமிழ்நாடு சேலத்தில் பதுங்கி இருந்த இன்னொரு பயங்கரவாதியும் கைது செய்யப்பட்டார். அவர்கள் 2 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடு முழுவதும் சோதனை

இந்த நிலையில் இந்தியா முழுவதும் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில் நேற்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் மத்தியபிரதேசம், குஜராத், கர்நாடகம், பீகார், மராட்டியம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அதிரடி சோதனை நடத்தி இருந்தனர்.

கர்நாடகத்தில் 2 மாவட்டங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். கடலோர பகுதியில் உள்ள உத்தரகன்னடா, பெங்களூரு அருகே உள்ள துமகூரு மாவட்டத்தில் இந்த சோதனை நடந்து இருந்தது. இந்த சோதனையின் போது பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

2 பேர் கைது

உத்தரகன்னடா மாவட்டம் பட்கல் பகுதியில் வசித்து வருபவர் அப்துல் முஸ்தகீர் (வயது 30). இதுபோல துமகூரு டவுன் ஜெயநகர் பகுதியில் வசித்து வருபவர் ரபீக் அகமது. இவர்கள் 2 பேருக்கும் சிரியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில் நேற்று 2 பேரின் வீடுகளிலும் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி இருந்தனர்.

அப்போது 2 பேரும் பயங்கரவாத அமைப்புடன் தொடர்ந்து தொடர்பில் இருந்ததும், பயங்கரவாத அமைப்புக்கு ஆள்சேர்க்கும் பணியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனால் அவர்கள் 2 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து செல்போன்கள், மடிக்கணினிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான 2 பேரையும் பெங்களூருவுக்கு அழைத்து வந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story