குஜராத் வியூகத்தை பா.ஜனதா அமல்படுத்துகிறதா?


குஜராத் வியூகத்தை பா.ஜனதா அமல்படுத்துகிறதா?
x
தினத்தந்தி 12 Dec 2022 1:03 AM IST (Updated: 12 Dec 2022 1:03 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா குஜராத் வியூகத்தை அமல்படுத்துகிறதா? என்பது குறித்து ஜெகதீஷ் ஷெட்டர் பதிலளித்துள்ளார்.

பாகல்கோட்டை:-

முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான ஜெகதீஷ் ஷெட்டர் பாகல்கோட்டையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பா.ஜனதா வேட்பாளர்கள்

கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட குஜராத் மாதிரியில் பா.ஜனதா வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்களா? என்பது எனக்கு தெரியாது. வேட்பாளர்கள் இப்படி தான் தேர்வு செய்யப்படுவார்கள் என்று உங்களுக்கு யாராவது கூறினார்களா?. ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஒவ்வொரு விதமாக தேர்தல் வியூகங்கள் வகுக்கப்படுகின்றன.

குஜராத்தில் உள்ளூர் நிலைக்கு ஏற்ப அந்த வியூகம் வகுக்கப்பட்டது. அந்த மாநிலத்தின் நிலை என்ன என்பது பிரதமர் மோடிக்கும், உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கும் நன்றாக தெரியும். பிற மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக மக்களின் மனநிலையை அறிய கருத்து கணிப்புகள் நடத்தப்படுகின்றன. அதில் கிடைக்கும் தகவல்கள் அடிப்படையில் வெற்றி வாய்ப்பு உள்ளவர்களுக்கு கட்சியின் டிக்கெட் வழங்கப்படுகிறது. இது கர்நாடகம் மட்டுமல்ல, எல்லா மாநிலங்களிலும் இந்த முறை பின்பற்றப்படுகிறது.

மூத்த தலைவர்கள்

கட்சியின் மூத்த தலைவர்களுக்கு டிக்கெட் கொடுப்பது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும். பிரதமர் மோடி ஆன்மிக பணிகள் மூலம் இந்து சமூகத்தை ஒருங்கிணைக்கும் பணியை செய்கிறார். ஆனால் மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்கள் அனைத்து சமூகங்களுக்கும் பொருந்துகிறது. அனைத்து திட்டங்களும் அனைத்து மதங்களை சேர்ந்தவர்களையும் உள்ளடக்கியது.

இவ்வாறு ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார்.


Next Story