பிரதமர் மோடிக்கு விண்வெளி வீரருக்கான பயிற்சியா...? நாசா தலைவர் பதில்


பிரதமர் மோடிக்கு விண்வெளி வீரருக்கான பயிற்சியா...? நாசா தலைவர் பதில்
x

தேஜஸ் விமானத்தில் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, சுயசார்பில் உலகில் வேறு யாருக்கும் நாம் குறைந்தவர்கள் அல்ல என குறிப்பிட்டார்.

புதுடெல்லி,

அமெரிக்க விண்வெளி துறையான நாசா அமைப்பு இந்தியாவின் இஸ்ரோ அமைப்புடன் இணைந்து பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், நாசா நிர்வாக அதிகாரியான பில் நெல்சன் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.

பல நாடுகளின் ஒத்துழைப்புடன் சர்வதேச விண்வெளி நிலையம் செயல்பட்டு வருகிறது. சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பறந்து செல்ல, இந்திய விண்வெளி வீரர் ஒருவருக்கு அடுத்த ஆண்டு இறுதியில் நாசா பயிற்சி அளிக்கும்.

அந்த இந்திய விண்வெளி வீரராக பிரதமர் மோடி இருப்பாரா? என்ற கேள்விக்கு பதிலளித்த நாசாவின் தலைவர் நெல்சன் கூறும்போது, விண்வெளிக்கு பறந்து செல்வது என்பது எந்த அரசியல்வாதிக்கும் ஒரு மதிப்பான அனுபவம் ஆக இருக்கும். அதிலும் நாட்டின் தலைவருக்கு இன்னும் அதிகளவில் இருக்கும்.

விண்வெளியில், அரசியல், மதம் அல்லது இனம் சார்ந்த எல்லைகள் என எதுவும் கிடையாது. பூமியில் உள்ள ஒரு குடிமகன் என்ற அளவிலேயே அது இருக்கும். பிரதமர் மோடி, விண்வெளி பற்றிய அறிவும், ஆர்வமும் கொண்டவர் என கூறியுள்ளார்.

ஆர்டெமிஸ் திட்டத்தின்கீழ், நிலவுக்கு முதல் பெண்ணை அனுப்பும் திட்டத்தில் நாசா உள்ளது. இதன்படி, செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கும் நாசா தயாராகி வருகிறது. இந்த திட்டத்தில் இந்தியாவின் பங்கு என்ன என்பது பற்றி அவர்களே முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆர்டெமிஸ் திட்டத்தில், இந்தியாவிடம் இருந்து நாசா எதிர்பார்ப்பது என்ன? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், நிலவு திட்டங்களில் சர்வதேச அளவிலான ஒத்துழைப்புக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. அதுபற்றிய விசயங்கள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

சமீபத்தில், தேஜஸ் விமானத்தில் பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். இதன்பின் அவர் வெளியிட்ட செய்தியில், சுயசார்பில் உலகில் வேறு யாருக்கும் நாம் குறைந்தவர்கள் அல்ல. இந்திய விமான படை மற்றும் டி.ஆர்.டி.ஓ. மற்றும் எச்.ஏ.எல்.லுக்கு என்னுடைய மனப்பூர்வ வாழ்த்துகள் என தெரிவித்து கொண்டார்.


Next Story