9 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக செலுத்தியது இஸ்ரோ - பிரதமர், ஜனாதிபதி வாழ்த்து


9 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக செலுத்தியது இஸ்ரோ - பிரதமர், ஜனாதிபதி வாழ்த்து
x

9 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளனர்

புதுடெல்லி,

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ, 'பி.எஸ்.எல்.வி சி-54' என்ற ராக்கெட்டை இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்த ராக்கெட் 'ஓசன்சாட்03' (இ.ஓ.எஸ்-06) என்ற புவி செயற்கைக்கோள் மற்றும் 8 நானோ செயற்கைகக்கோள்களை சுமந்து சென்றது.

இந்த நிலையில், பி.எஸ்.எல்.வி சி-54 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "பி.எஸ்.எல்.வி சி-54 திட்டம் வெற்றிகரமாக ஏவப்பட்டதற்கு இஸ்ரோ மற்றும் என்.எஸ்.ஐ.எல்-க்கு வாழ்த்துகள். இ.ஓ.எஸ்-06 செயற்கைக்கோள் நமது கடல் வளங்களை சிறந்த முறையில் பயன்படுத்த உதவும்.

பிக்சல் ஸ்பேஸ், துருவா ஸ்பேஸ் என்ற இந்திய நிறுவனங்களின் 3 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டது ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தை அறிவிக்கிறது. இதன் மூலம் விண்வெளி தொழில்நுட்பத்தில் இந்திய திறமைகளை முழுமையாக உணர முடியும். இந்த ராக்கெட் ஏவுதலில் ஈடுபட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்" என்று கூறியுள்ளார்.

மேலும் ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "இ.ஓ.எஸ்-06 மற்றும் 8 நானோ செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்கு இஸ்ரோவுக்கு வாழ்த்துகள்! பி.எஸ்.எல்.வி சி-54 விண்கலம் 9 செயற்கைக்கோள்களையும் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியுள்ளது. கூட்டாக உருவாக்கப்பட்ட செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்காக இந்தியா மற்றும் பூடானின் குழுக்களையும் நான் பாராட்டுகிறேன்" என்று கூறியுள்ளார்.


Next Story