நீட் தேர்வுக்கான உத்தேச விடைகள் நாளை வெளியாகும் என தகவல்
நீட் தேர்வுக்கான உத்தேச விடைகள் நாளை வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதுடெல்லி,
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக 'நீட்' எனப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான 'நீட்' தேர்வு நாடு முழுவதும் அண்மையில் நடைபெற்றது. தமிழகத்தில் இந்த தேர்வு எழுதுவதற்கு ஏராளமான மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். தேர்வு அறைக்குள் மாணவ-மாணவிகள் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.
நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வை 18,72,343 பேர் விண்ணப்பித்ததில் 17,78,725 பேர் மட்டுமே வருகை தந்து தேர்வை எழுதினர் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்தது.
இந்நிலையில், நீட் தேர்வுக்கான உத்தேச விடைகள் நாளை அதிகாரப்பூர்வாக வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. உத்தேச விடைகளை neet.nta.nic.in என்ற இணையதள பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
உத்தேச விடைகள் தொடர்பாக எதிர்ப்புகள் மற்றும் சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின் அதனை தெரியப்படுத்த தேர்வருக்கு வாய்ப்பளிக்கப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தியுள்ளது.