நீதிபதிகள் நியமனம் தொடர்பான கொலிஜியம் சிபாரிசுகளை மத்திய அரசு நிலுவையில் வைப்பதை ஏற்க முடியாது சுப்ரீம் கோர்ட்டு கருத்து


நீதிபதிகள் நியமனம் தொடர்பான கொலிஜியம் சிபாரிசுகளை மத்திய அரசு நிலுவையில் வைப்பதை ஏற்க முடியாது  சுப்ரீம் கோர்ட்டு கருத்து
x

நீதிபதிகள் நியமனம் தொடர்பான கொலிஜியம் சிபாரிசுகள் மீது மத்திய அரசு முடிவெடுக்காமல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

நீதிபதிகள் நியமனம் தொடர்பான கொலிஜியம் சிபாரிசுகள் மீது மத்திய அரசு முடிவெடுக்காமல் காலம் தாழ்த்துவதற்கு எதிராக பெங்களூரு வக்கீல்கள் சங்கம், சுப்ரீம் கோர்ட்டில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தது. அதை நீதிபதிகள் எஸ்.கே.கவுல், அபய் எஸ்.ஒகா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் விகாஸ் சிங் ஆஜராகி வாதிடுகையில் கூறியதாவது:-

நீதிபதி தீபாங்கர் தத்தாவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் சிபாரிசு செய்து 5 வாரங்கள் ஆகியும் மத்திய அரசு முடிவெடுக்காமல் உள்ளது. மத்திய அரசுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

இதற்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கூறியதாவது:-

நீதிபதிகள் நியமனம் தொடர்பான கொலிஜியம் சிபாரிசுகள் மீது மத்திய அரசு முடிவெடுக்காமல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. கொலிஜியம் சிபாரிசுகளை ஏற்று நியமன உத்தரவுகளை பிறப்பிக்கவோ, ஆட்சேபனைகளை தெரிவிக்கவோ மத்திய அரசு மறுக்கிறது.

இதுவரை 10 நீதிபதிகள் பற்றிய சிபாரிசுகள், மத்திய சட்ட அமைச்சகத்திடம் நிலுவையில் உள்ளது. எனவே, இந்த மனு தொடர்பாக மத்திய சட்ட அமைச்சக செயலருக்கு உத்தரவிடுகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story