பயங்கரவாதி ஷாரிக்கை ஓரிரு நாட்களில் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு
பெங்களூரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் பயங்கரவாதி ஷாரிக்கை ஓரிரு நாட்களில் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அவரது உடலநலம் குறித்து டாக்டர்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து தகவல் பெற்று வருகின்றனர்.
பெங்களூரு:-
குக்கர் குண்டு வெடிப்பு
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு நாகுரி பகுதியில் கடந்த மாதம் (நவம்பர்) 19-ந் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்திருந்தது. இநத குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஆட்டோ டிரைவர் புருஷோத்தம், பயங்கரவாதி ஷாரிக் பலத்தகாயம் அடைந்தார்கள். அவர்கள் 2 பேரும் மங்களூருவில் உள்ள பாதர் முல்லர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். குண்டுவெடிப்பில் பயங்கரவாதி ஷாரிக் பலத்த தீக்காயம் அடைந்திருந்தார்.
இதற்காக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது தீக்காயம் 80 சதவீதம் குணமடைந்திருந்தது. அதே நேரத்தில் மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து விசாரிக்க என்.ஐ.ஏ.வுக்கு கர்நாடக அரசு சிபாரிசு செய்திருந்ததால், அதன்பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஷாரிக் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதால், அவரிடம் விசாரித்து தகவல்களை பெறுவதில் அதிகாரிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டது.
விக்டோரியாவில் சிகிச்சை
இதையடுத்து, பயங்கரவாதியிடம் குக்கர் குண்டுவெடிப்பு குறித்தும், அவருக்கு பின்னணியில் இருப்பவர்கள், அவருக்கு யாருடன் தொடர்பில் இருந்தார் என்பது குறித்து விசாரிக்க முடிவு செய்தனர். இதற்காக ஆஸ்பத்திரி டாக்டர்களின் அனுமதி பெற்று நேற்று முன்தினம் மங்களூருவில் இருந்து ஷாரிக், பெங்களூரு அழைத்து வரப்பட்டார். விக்டோரியா ஆஸ்பத்திரியில் தீக்காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த வார்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 24 மணிநேரமும் முகாமிட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதே நேரத்தில் வி.வி.புரம் போலீசார் 2 பேரும், வார்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஷாரிக் சிகிச்சை பெறும் வார்டுவை சுற்றி 10-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஷாரிக் சிகிச்சை பெறும் வார்டுக்கு வருபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.
ஓரிரு நாட்களில் காவலில் எடுத்து...
ஷாரிக்கின் உடல் நலம் குறித்து டாக்டர்களிடம், என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து தகவல்களை பெற்று வருகின்றனர். குண்டு வெடிப்பு குறித்து அவரிடம் விசாரணை நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், ஷாரிக் குணமடைவதை எதிர்த்து அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.அவர் பெரும்பாலும் குணமடைந்து விட்டதால், இன்னும் ஓரிரு நாட்களில் ஷாரிக்கை காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் தயாராகி வருகின்றனர். அவ்வாறு விசாரணை நடத்தும் பட்சத்தில் குண்டு வெடிப்பு குறித்து முக்கிய தகவல்கள் வெளியே வர வாய்ப்புள்ளது.