கனமழை எதிரொலி; ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவால் போக்குவரத்து நிறுத்தம்!
ஜம்மு காஷ்மீரில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரில் நேற்று யூனியன் பிரதேசம் முழுவதும் மிக கனமழை கொட்டி தீர்த்தது. அதனால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.
இதன் காரணமாக பல்வேறு இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டன. நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மீட்பு பணிகளை அதிகாரிகள் துரிதப்படுத்தியுள்ளனர்.
அங்குள்ள சேனாப் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
அதே வேளையில் ஜம்மு - ஸ்ரீநகர் மற்றும் ஸ்ரீநகர் - கார்கில் நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக நூற்றுக்கணக்கான வாகனங்கள் ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் உதம்பூர் பகுதியில் வரிசையில் நிற்கின்றன.
வானிலை மைய அறிவிப்பின்படி அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திரிபுரா மலையில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி கோயில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் பல சாலைகள் மூடப்பட்டுள்ளன. போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
அமர்நாத் யாத்திரை செல்லும் மக்கள் தற்போதைக்கு பயணத்தை நிறுத்தி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். போக்குவரத்து சீரானதும் மீண்டும் பயணத்தை தொடங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.