அசாமில் ஜப்பானிய மூளை காய்ச்சலுக்கு 23 பேர் உயிரிழப்பு
அசாமில் ஜப்பானிய மூளை காய்ச்சலால் நடப்பு ஏப்ரலில் இருந்து இதுவரை 23 பேர் உயிரிழந்து உள்ளனர்.
கவுகாத்தி,
அசாமில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு மாவட்டங்களிலும் வெள்ள பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து உள்ளது. இதில், 190க்கும் கூடுதலானோர் உயிரிழந்து உள்ளனர்.
இந்த சூழலில், வெள்ள பாதிப்புகளுடன் ஜப்பானிய மூளை காய்ச்சல் எனப்படும் கொசுக்களால் பரவும் வைரசின் பாதிப்புகளும் அதிகரித்து வருகின்றன. இதனால், மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு பாதிப்புகள் ஏற்படும்.
இதன்படி, நடப்பு ஆண்டு ஏப்ரலில் இருந்து இதுவரை 23 பேர் உயிரிழந்து உள்ளனர் என அசாமின் தேசிய சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.
இவர்களில் கடந்த 24 மணிநேரத்தில் வெள்ளம் பாதித்த மோரிகாவன் மற்றும் நல்பாரி ஆகிய 2 மாவட்டங்களை சேர்ந்த தலா 2 பேர் என மொத்தம் 4 பேர் உயிரிழந்து உள்ளனர். தவிர, 16 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதுவரை அசாமில் 160 பேருக்கு இதன் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அசாமில் 4 ஆண்டுகளில் ஜப்பானிய மூளை காய்ச்சல் மற்றும் கடுமையான மூளை காய்ச்சல் பாதிப்புக்கு 1,069 பேர் வரை உயிரிழந்து உள்ளனர்.