கர்நாடகத்தில் தொழில் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு 80 சதவீத வேலை; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு
கர்நாடகத்தில் தொழில் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு 80 சதவீத வேலை வழங்க வகை செய்யும் சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
பெங்களூரு:
பழமையான மொழி
கர்நாடக மாநிலம் ஹாவேரியில் 86-வது அகில இந்திய கன்னட இலக்கிய மாநாடு நேற்று தொடங்கியது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு, மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:-
கன்னடம் மிகவும் பழமையான மொழி. கன்னடர்களின் வாழ்க்கை புராதனமானது, பழமையானது, பெருமை மிக்கது. நாட்டிலேயே கன்னட கலாசாரம் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. கன்னட கலாசாரத்திற்கு பெரிய பலம், அர்த்தம், உணர்வுகள் உள்ளன. கன்னட கலாசாரத்தில் இலக்கியத்தின் பங்கு முக்கியமானது. இதை அடையாளம் கண்டு வளர்க்க வேண்டும் என்பது தான் இந்த மாநாட்டின் நோக்கம்.
விதைக்க வேண்டும்
கன்னட உணர்வுகளை ஊட்ட வேண்டும். இதை எல்லா இடங்களிலும் பரப்ப வேண்டும். நாட்டில் கன்னடத்தை ஆழமாக விதைக்க வேண்டும். அது வளர்ந்து பெரிய மரமாக நிற்க வேண்டும். இந்த நோக்கத்தின் அடிப்படையில் இந்த மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டின் தலைவர் தொட்டரங்கேகவுடா ஒரு முழுமையான இலக்கியவாதி. மனிதர்களின் சிக்கலான உணர்வுகளை புரிந்து கொண்டு சாமானிய மக்களுக்கு புரியும் மொழியில் தெரிவிக்கும் திறனை கொண்டுள்ளார்.
அவரது இந்த திறன் இலக்கியம், கவிதைகள், பாடல்களில் தெரிய வருகிறது. ஒரு மொழி, கலாசாரம் வளர வேண்டுமெனில் அது கடந்து வந்த பாதையை நாம் திரும்பி பார்க்க வேண்டும். இதில் நமது பங்கு என்ன என்பதை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில் நமது எதிர்காலத்தை நிறுவ வேண்டும். கன்னடத்தின் கலாசாரம், பாரம்பரியம் மிகவும் உயர்ந்தது.
மொழி வேற்றுமை
கன்னட மொழி எப்போதும் அதன் உயரிய தன்மையை இழந்தது இல்லை. இந்த பூமி, சூரியன் இருக்கும் வரை கன்னடம் உயர்ந்த இடத்திலேயே இருக்கும். கன்னடத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் எந்த சக்தியும் இன்னும் பிறக்கவில்லை, பிறக்கப்போவதும் இல்லை. அதனால் தன்னம்பிக்கையுடன் கன்னடத்தை நாம் வளர்க்க வேண்டும். கன்னட வளர்ச்சியில் நமது பங்கும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒவ்வொருவரும் இருக்க வேண்டும்.
கர்நாடகத்திற்கு இதுவரை 8 ஞானபீட விருதுகள் கிடைத்துள்ளன. நாட்டின் வேறு எந்த மாநிலத்திற்கும் இத்தனை ஞானபீட விருதுகள் கிடைக்கவில்லை. இது கன்னட இலக்கியத்தின் பலத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. 2 சரஸ்வதி சம்மான் விருதுகளும் கன்னடத்திற்கு கிடைத்துள்ளன. கன்னடர்களின் மொழி வேற்றுமையில் ஒற்றுமை உள்ளது. நடுநாடு கன்னடம், எல்லை நாடு கன்னடம், தென்கர்நாடகம், கடலோர கன்னடம், கல்யாண கர்நாடக கன்னடம் என எல்லாவற்றிலும் நமது மொழி வளர்கிறது.
விவசாய மண்டலங்கள்
கர்நாடக ஏகிகரண் போராட்டம் மூலம் கன்னட இதயங்கள் ஒன்று கூடியது. இந்த போராட்டத்திற்கு மைசூரு பகுதி மக்களும் ஆதரவு தெரிவித்தனர். அதனால் கன்னடம் பேசும் மக்கள் அனைவரும் ஒரு மாநிலத்தில் சேர்ந்தனர். கர்நாடகம் வளமிக்கதாக உள்ளது. நமது மாநிலத்தில் 10 விவசாய மண்டலங்கள் உள்ளன. ஆண்டு முழுவதும் ஏதாவது ஒரு மண்டலத்தில் பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
கடந்த 5 ஆண்டுகளில் புதிதாக 1½ லட்சம் ஏக்கர் நிலத்திற்கு பாசன வசதியை ஏற்படுத்தியுள்ளோம். அடுத்த 10 ஆண்டுகள் நீர்ப்பாசன ஆண்டாக இருக்கப்போகிறது. உணவு உற்பத்தி நமது சுயமரியாதையின் வளம். கன்னடர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் நோக்கத்தில் ஒரு முழுமையான சட்டம் விரைவில் கொண்டு வரப்படுகிறது. இதற்கான வரைவு மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது.
80 சதவீத வேலைகள்
இந்த சட்டம் அமலுக்கு வந்தால் கர்நாடகத்தில் தொழில் நிறுவனங்களில் 80 சதவீத வேலைகள் கன்னடர்களுக்கு கிடைக்கும். இதற்காகவே வேலை வாய்ப்பு கொள்கையை கொண்டு வந்துள்ளோம். இதுகுறித்து மந்திரிசபையில் தீர்மானிக்கப்படும். இந்த மாநாட்டில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை மாநில அரசு அப்படியே அமல்படுத்தும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.
இந்த மாநாட்டில் மாநாட்டு குழு தலைவர் தொட்டரங்கேகவுடா, மேல்-சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி, கன்னட கலாசாரத்துறை மந்திரி சுனில்குமார், தொழில்துறை மந்திரி முருகேஷ் நிரானி, தொழிலாளர் நலத்துறை மந்திரி சிவராம் ஹெப்பார், சிவக்குமார் உதாசி எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டையொட்டி ஹாவேரி நகரம் கர்நாடக கொடிகளால் விழாக்கோலம் பூண்டுள்ளது. எங்கு பார்த்தாலும் மஞ்சள், சிவப்பு நிறத்தை கொண்ட கொடிகள் கட்டப்பட்டுள்ளன.